மொறுமொறுப்பான பக்கோடா, பூரி மற்றும் வடை போன்ற வறுத்த உணவுகளை பார்த்தால் நாவூறாதவர்களே இருக்க முடியாது. சுவைக்கு குறைவில்லாத இந்த உணவுகள், சாப்பிட்டு முடித்தவுடன் வயிற்றுக்கு மட்டும் அவ்வளவு இதமாக இருப்பதில்லை.
வறுத்த உணவுகளில் உள்ள அதிகப்படியான கொழுப்பு மற்றும் அவை தயாரிக்கப்படும் விதம் செரிமான மண்டலத்தை மந்தமடையச் செய்கிறது. இதனால் வயிறு உப்பசம், நெஞ்செரிச்சல், வாயுத்தொல்லை மற்றும் ஒருவிதமான அசதி போன்றவை ஏற்படுகின்றன. உங்களுக்கும் இந்த பிரச்சனை இருக்கா?
குறிப்பாக, இன்று நாம் மேற்கொள்ளும் உடலுழைப்பு இல்லாத வாழ்வியல் முறை, இந்த செரிமான சிக்கல்களை இன்னும் அதிகப்படுத்துகிறது. இந்த அசௌகரியங்களில் இருந்து தப்பிக்கவும், செரிமான மண்டலத்திற்கு தேவையான சிறு ஓய்வை அளிக்கவும் சில இயற்கை வழிமுறைகள் கைவசம் உள்ளன. இவற்றை முறையாகப் பின்பற்றுவதன் மூலம், செரிமானம் தொடர்பான அனைத்து பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் பெறலாம்.
ஓமம்: ஓமம் ஒரு சிறந்த இயற்கை செரிமான ஊக்கியாகும். வறுத்த உணவுகளை சாப்பிட்ட பிறகு ஏற்படும் வாயுத்தொல்லை மற்றும் அஜீரணத்தைக் குறைக்க இது பெரிதும் உதவுகிறது. இதில் உள்ள ‘தைமால்’ (Thymol) எனும் வேதிப்பொருள் செரிமான சாற்றை அதிகம் சுரக்க செய்து உணவை எளிதில் உடைக்க உதவுகிறது என்கிறது NIH ஆய்வு.
நீங்கள் பூரி அல்லது வடை போன்ற உணவுகளை செய்யும்போதே அதன் மாவில் சிறிதளவு ஓமத்தை சேர்த்து பிசையலாம். அல்லது உணவுக்கு பிறகு ஒரு தேக்கரண்டி ஓமத்தை மென்று சாப்பிடலாம். உணவருந்தி அரை மணி நேரம் கழித்து ஓமம் கலந்த வெதுவெதுப்பான நீரை குடிப்பதன் மூலம் உடனடி மாற்றத்தை உணர முடியும்.
இஞ்சி டீ : இஞ்சி, செரிமான மண்டலத்தின் நண்பனாகக் கருதப்படுகிறது. இதில் உள்ள ஆக்ஸிஜனேற்றப் பண்புகள் வயிற்றுப் பகுதியில் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்கும். வறுத்த உணவுகளை சாப்பிடும் முன்பே, காலையில் இஞ்சி டீ குடிப்பதன் மூலம் உங்கள் வயிறை அந்த உணவுகளை எதிர்கொள்ளத் தயார் செய்யலாம்.
கடைகளில் கிடைக்கும் இஞ்சி டீ பொடிகளைத் தவிர்த்துவிட்டு, புதிய இஞ்சியைத் தட்டிப் போட்டு கொதிக்க வைத்த நீரையே பயன்படுத்தவும். இது செரிமான என்சைம்களை தூண்டி, உணவு எளிதாக குடலுக்குள் நகர வழிவகை செய்கிறது. ஒரு நாளைக்கு அரை கப் இஞ்சி டீ குடிப்பது ஆரோக்கியமான செரிமானத்திற்கு உகந்தது.
புரோபயாடிக் உணவுகள்: நமது குடலில் உள்ள நல்ல பாக்டீரியாக்கள் செரிமானத்திற்கு மிக அவசியம். எண்ணெய் பொருட்கள் இந்த குடல் சூழலை சமநிலையற்றதாக மாற்றக்கூடும். இதனை சரிசெய்ய தயிர் மற்றும் மோர் போன்ற புரோபயாடிக் உணவுகள் உதவுகின்றன.
வறுத்த உணவுகளை சாப்பிடும்போது ஒரு கிண்ணம் தயிர் அல்லது ஒரு டம்ளர் மோர் உடன் சேர்த்துக்கொள்வது சிறந்தது. இது குடல் இயக்கத்தைச் சீராக்குவதுடன், அதிகப்படியான கொழுப்பினால் குடலுக்கு ஏற்படும் அழுத்தத்தை குறைக்கிறது. புளித்த பால் பானங்கள் செரிமான பாதையை சுத்தமாக வைத்திருக்க உதவும்.
எலுமிச்சை நீர்: எலுமிச்சையில் உள்ள அமிலத்தன்மை மற்றும் வைட்டமின் சி, கல்லீரலில் பித்தநீரை (Bile) சுரக்க செய்யத் தூண்டுகிறது. இந்த பித்தநீர் தான் உணவிலுள்ள கொழுப்பைக் கரைக்க முக்கியப் பங்கு வகிக்கிறது. ஒரு கிண்ணம் வறுத்த உணவுகளைச் சாப்பிடும்போது, அதனுடன் மிதமான அளவு எலுமிச்சை சாறு கலந்த நீரைக் குடிக்கலாம்.
இது உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றவும், சாப்பிட்ட பிறகு ஏற்படும் மந்த நிலையை மாற்றவும் உதவுகிறது. சுமார் அரை கப் முதல் ஒரு கப் வரை எலுமிச்சை நீரை மிதமான செறிவில் குடிப்பது பாதுகாப்பானது.
கருப்பு உப்பு நீர்: இந்தியாவின் பாரம்பரிய மருத்துவ முறைகளில் ‘காலா நமக்’ எனப்படும் கருப்பு உப்பு செரிமானத்திற்காகப் பயன்படுத்தப்படுகிறது. இதில் உள்ள தாதுக்கள் வயிற்று உப்புசத்தைக் குறைக்கவும், செரிமான மண்டலத்தின் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தவும் உதவுகின்றன என Health Benefits Uses Of Black Salt என்ற தலைப்பில் வெளியான ஆய்வுக்கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வறுத்த உணவுகளைச் சாப்பிட்டு முடித்த பிறகு, ஒரு சிட்டிகை கருப்பு உப்பு கலந்த வெதுவெதுப்பான நீரைக் குடிப்பது வயிற்றுப் பொருமலைக் குறைக்கும். இது உடலில் உள்ள எலக்ட்ரோலைட் சமநிலையைப் பாதுகாக்கவும், இரைப்பையில் அமிலத்தன்மையைச் சீராக வைக்கவும் துணைபுரிகிறது.
நார்ச்சத்து மிகுந்த சட்னி: வறுத்த உணவுகளுடன் நார்ச்சத்து நிறைந்த சட்னி அல்லது காய்கறி சாலட்களை சேர்த்துக்கொள்ள வேண்டும். புதினா, கொத்தமல்லி, இஞ்சி, பூண்டு மற்றும் எலுமிச்சை சேர்த்து அரைக்கப்பட்ட சட்னிகளில் அதிக நார்ச்சத்து மற்றும் என்சைம்கள் உள்ளன.
இவை கொழுப்பு நிறைந்த உணவுகளை ஜீரணிக்க கூடுதல் ஆற்றலைத் தருகின்றன. புதினா மற்றும் மல்லி சட்னிகள் குளிர்ச்சியான தன்மையை கொண்டிருப்பதால், வறுத்த உணவுகளால் ஏற்படும் சூட்டை குறைத்து வயிற்றிற்கு இதமளிக்கும்.
இரவில் தவிர்க்கவும்: இரவு நேரத்தில் நமது செரிமான மண்டலம் ஓய்வு நிலைக்கு செல்லத் தொடங்கும். அந்த சமயத்தில் கனமான வறுத்த உணவுகளை சாப்பிடுவது தூக்கத்தை பாதிப்பதோடு, மறுநாள் காலையில் கடும் அஜீரணத்தையும் ஏற்படுத்தும்.
எனவே, இரவு நேரங்களில் பசி எடுத்தால் பழங்கள் அல்லது எளிதில் ஜீரணமாகும் காய்கறி சூப் போன்றவற்றை சாப்பிடலாம். இரவு உணவிற்கும் உறக்கத்திற்கும் இடையே குறைந்தது 3 மணி நேர இடைவெளி இருப்பது அவசியம். வறுத்த உணவுகளைப் பகல் பொழுதில் சாப்பிடுவது, உடல் இயக்கத்தின் மூலம் அதை செரிக்க வைக்க உதவுகிறது.

