பொதுவாக நம் வீடுகளில் குழந்தைகளுக்கு தலையில் பேன் இருந்தால், “அது எல்லாருக்கும் வர்றதுதானே, ஒரு பேன் சீப்பை வைத்து எடுத்துவிட்டால் போய்விடும்” என்று மிக சாதாரணமாக நினைப்பதுண்டு. ஆனால், இந்த சிறிய பூச்சிகள் ஒரு உயிரையே பறிக்கும் அளவிற்கு ஆபத்தானது என்பது நம்மில் பலருக்கு தெரிவதில்லை.
பேன்கள் என்பவை வெறும் அரிப்பை மட்டும் ஏற்படுத்துபவை அல்ல, அவை நம் உடலிலிருந்து ரத்தத்தை உறிஞ்சி வாழும் ஒட்டுண்ணிகள். ஒரு சில பேன்கள் இருந்தால் பரவாயில்லை, ஆனால் அதுவே ஆயிரக்கணக்கில் பெருகி, பல மாதங்களாக கவனிக்கப்படாமல் இருந்தால், அது உடலில் ரத்த சோகையை (Anemia) உண்டாக்கி உயிருக்கே உலைய வைத்துவிடும்.
சமீபத்தில் ஒடிசா மாநிலம் பூரி மாவட்டத்தில் நடந்த ஒரு துயர சம்பவம் நம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 12 வயது சிறுமி, தலையில் ஏற்பட்ட அதீத பேன் தொல்லையால் உயிரிழந்துள்ளார் என்பது தான் அது. பல மாதங்களாக அந்த சிறுமியின் தலையில் பேன்கள் பெருகி, அதன் பாதிப்பால் உச்சந்தலையிலும் மண்டை ஓட்டிலும் கடுமையான தொற்று ஏற்பட்டுள்ளது.
ஒருகட்டத்தில் அந்தத் தொற்றிலிருந்து வீசிய துர்நாற்றம் காரணமாக அந்தச் சிறுமி வெளியில் செல்வதையே நிறுத்தியுள்ளார். முறையான மருத்துவ சிகிச்சை சரியான நேரத்தில் கிடைக்காததால், அந்தத் தொற்று தீவிரமடைந்து சிகிச்சை பலனின்றி சிறுமி உயிரிழந்தார்.
பேன் தொல்லை என்பது வெறும் சுகாதாரம் சார்ந்த விஷயம் மட்டுமல்ல, அது ஒரு மருத்துவ அவசர நிலை என்பதை இந்த சம்பவம் நமக்கு உணர்த்துகிறது. தலையில் பேண்கள் இருந்தால் அலட்சியமாக இருக்க வேண்டாம் என்பதையும் இந்த செய்தி வலியுறுத்துகிறது.
தலையிலிருக்கும் பேன்கள் (Pediculus humanus capitis) என்பவை மனித ரத்தத்தை உணவாகக் கொண்டு வாழும் மிகச்சிறிய பூச்சிகள். இவை பறக்கவோ அல்லது குதிக்கவோ முடியாது, ஊர்ந்து மட்டுமே செல்லும். இவை மனிதர்களின் தலைமுடியில் ஒட்டிக்கொண்டு, உச்சந்தலையிலிருந்து ரத்தத்தை உறிஞ்சுகின்றன.
3 முதல் 11 வயது வரையிலான குழந்தைகளுக்கு இது அதிகம் ஏற்படுகிறது. குறிப்பாக, பெண் குழந்தைகளுக்கு இது வரும் வாய்ப்பு அதிகம். ஏனெனில் அவர்கள் ஒருவருக்கொருவர் சீப்பு, துண்டு அல்லது தலைமுடியைச் சார்ந்த பொருட்களைப் பகிர்ந்து கொள்கிறார்கள்.
ஒரு பெண் பேன் ஒரு நாளைக்குச் சுமார் 6 முட்டைகள் (ஈறு) வரை இடும். இந்த முட்டைகள் ஒரு வாரத்தில் பொரிந்து குஞ்சுகளாக மாறும். ஒரு வளர்ந்த பேன் மனிதத் தலையில் 30 நாட்கள் வரை உயிர்வாழும். ஆனால், தலையை விட்டு கீழே விழுந்தால் இரண்டு நாட்களுக்கு மேல் உயிர்வாழ முடியாது என CDC ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அறிகுறிகள் என்ன? ஆரம்பத்தில் எந்த அறிகுறியும் தெரியாமல் இருக்கலாம். ஆனால் தொற்று அதிகரிக்கும் போது பின்வரும் மாற்றங்கள் ஏற்படும் என்கிறது NIH ஆய்வு.
தலையில் எதோ ஊர்வது போன்ற உணர்வு, அதிகப்படியான அரிப்பு (இது பேன்களின் எச்சில் நம் தோலில் படும்போது ஏற்படும் அலர்ஜியால் உண்டாகிறது), அரிப்பினால் ஏற்படும் புண்கள் மற்றும் அதில் பாக்டீரியா தொற்று ஏற்படுதல். தூக்கமின்மை மற்றும் எரிச்சல் குணம்.
ரத்த சோகையும் மரணமும்: பேன்கள் சிறிய அளவில் ரத்தத்தை உறிஞ்சினாலும், அவை ஆயிரக்கணக்கில் இருக்கும்போது ஒரு குழந்தையின் உடலில் இருந்து குறிப்பிடத்தக்க அளவு ரத்தத்தை இழக்கச் செய்கின்றன.
ஒரு பெண் பேன் சுமார் 0.0001579 மிலி ரத்தத்தை உறிஞ்சுகிறது. இது பார்ப்பதற்குச் சிறியதாகத் தோன்றினாலும், நீண்ட காலப் பாதிப்பு மற்றும் ஆயிரக்கணக்கான பேன்கள் சேரும்போது அது கடுமையான ‘இரும்புச் சத்து குறைபாடு ரத்த சோகைக்கு’ (Iron Deficiency Anemia) வழிவகுக்கிறது என்கிறது ஆய்வு.
2023-ம் ஆண்டு சவுதி அரேபியாவில் 10 வயது சிறுமி ஒருவர் மயக்கம் மற்றும் ரத்த சோகையுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பரிசோதனையில் அவரது உடலில் ரத்த அளவு (Hb) வெறும் 4 g/dl ஆகக் குறைந்திருந்தது கண்டறியப்பட்டது. இதற்கு அவரது தலையில் இருந்த அதீத பேன் தொல்லையே காரணம் என உறுதி செய்யப்பட்டது. அதேபோல, 2020-ல் அமெரிக்காவின் ஜார்ஜியாவில் 12 வயது சிறுமி இதே காரணத்தால் இதய பாதிப்பு ஏற்பட்டு உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
பேண் வராமல் தடுப்பது எப்படி? பேன் தொல்லையை ஆரம்பத்திலேயே கவனிப்பது மிக அவசியம்.
கடைகளில் கிடைக்கும் பேன் கொல்லி ஷாம்பூக்கள் அல்லது மருந்துகளைப் பயன்படுத்தலாம். ஒருமுறை பயன்படுத்திய பிறகு, முட்டைகள் பொரிப்பதைக் கணக்கில் கொண்டு 7 முதல் 9 நாட்களுக்குப் பிறகு மீண்டும் ஒருமுறை பயன்படுத்த வேண்டும்.
தேயிலை மர எண்ணெய் (Tea tree oil), வேப்ப எண்ணெய், லாவெண்டர் எண்ணெய் மற்றும் இலவங்கப்பட்டை இலை எண்ணெய் போன்றவை சிறந்த பலன் தரும். இவை இயற்கையான பூச்சிக்கொல்லி பண்புகளைக் கொண்டவை.
பாதிக்கப்பட்ட நபர் பயன்படுத்திய சீப்பு, தலையணை உறை மற்றும் உடைகளை வெந்நீரில் துவைக்க வேண்டும். தினமும் தலைவாரும் பழக்கம் பேன்களின் எண்ணிக்கையைக் குறைக்க உதவும்.
பேண் இருப்பதை சாதாரணமாக நினைத்து கண்டுகொள்ளாமல் விடக்கூடாது. உங்கள் குழந்தையின் தலையில் பேன் இருந்தால், உடனே அதற்கான சிகிச்சையைத் தொடங்குவது அவசியம்.

