வாழ்க்கையில் ஒருமுறை கூட கோபப்படாத மனிதர்களே இருக்க முடியாது. போக்குவரத்து நெரிசல், அலுவலக வேலைப்பளு, வீட்டில் ஏற்படும் சின்ன சின்ன வாக்குவாதங்கள் என ஏதாவது ஒரு சூழலில் நாம் அனைவரும் நிதானத்தை இழக்கிறோம். ஆனால், இந்த “கோபம்” உங்கள் இதயத்தை எந்த அளவிற்குப் பாதிக்கிறது என்பதை எப்போதாவது யோசித்தது உண்டா?
சமீபத்திய மருத்துவ ஆய்வுகள் கோபத்திற்கும் இதய நலத்திற்கும் இடையே உள்ள அதிர்ச்சியூட்டும் தொடர்பை வெளிகொண்டுவந்துள்ளது. இந்த ஆய்வு frequent anger to increased risk of heart disease என்ற தலைப்பில் NIH ஆய்வுத்தளத்தில் வெளியாகியுள்ளது.
நாம் சாதாரணமாக கடந்து செல்லும் ஆத்திரம், உண்மையில் நம் உடலுக்குள் ஒரு போராட்டத்தையே நடத்துகிறது என்கிறது ஆய்வு. இது வெறும் மனநிலை மாற்றம் மட்டுமல்ல, உங்கள் ரத்த நாளங்களின் நெகிழ்வுத்தன்மையை குறைத்து, மாரடைப்புக்கான வாய்ப்பை அமைதியாக உருவாக்குகிறது.
நாம் அன்றாடம் சந்திக்கும் மன அழுத்தமும், சட்டென்று வெடிக்கும் கோபமும் நம் ஆயுளை எப்படிக் குறைக்கின்றன என்பதைப் புரிந்து கொள்வது அவசியம். அமெரிக்காவில் உள்ள பல முக்கிய நிறுவனங்களை சேர்ந்த விஞ்ஞானிகள், 280 ஆரோக்கியமான இளைஞர்களை வைத்து ஒரு முக்கியமான ஆய்வை மேற்கொண்டனர். இவர்களுக்கு சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் போன்ற எந்தப் பாதிப்பும் இல்லை. இவர்களை நான்கு குழுக்களாக பிரித்து, ஒவ்வொரு குழுவையும் ஒரு குறிப்பிட்ட உணர்வை வெளிப்படுத்தச் சொன்னார்கள்.
8 நிமிட கோபம்! ஒரு குழுவிடம் தங்களுக்கு மிகவும் கோபம் வந்த பழைய நினைவுகளை 8 நிமிடங்கள் அசைபோட சொன்னார்கள். மற்ற குழுக்களிடம் கவலை, சோகம் போன்ற நினைவுகளைப் பகிரச் சொன்னார்கள். இதில் வேடிக்கை என்னவென்றால், சோகமாக இருந்தவர்களையோ அல்லது சாதாரணமாக இருந்தவர்களையோ விட, கோபப்பட்டவர்களின் உடலில் தான் மிகப்பெரிய மாற்றம் நிகழ்ந்தது. அந்த எட்டு நிமிட கோபம் அவர்களின் ரத்த நாளங்களின் செயல்பாட்டை பாதியாக குறைத்துவிட்டது.
பொதுவாக நமது ரத்த நாளங்கள் ரத்த ஓட்டத்திற்கு ஏற்ப விரிவடைந்து சுருங்கும் தன்மை கொண்டவை. இதனை ‘எண்டோதீலியம்’ செயல்பாடு என்று மருத்துவர்கள் அழைக்கிறார்கள். நாம் கோபப்படும்போது உடலில் ‘கார்டிசோல்’ மற்றும் ‘அட்ரினலின்’ போன்ற அழுத்த ஹார்மோன்கள் அதிகமாக சுரக்கின்றன. இந்த ஹார்மோன்கள் ரத்த நாளங்களின் உட்பகுதியை இறுக்கமடைய செய்கின்றன.
இதனால் ரத்த நாளங்கள் விரிவடைய முடியாமல் போகிறது. இந்த ஆய்வு முடிவுகளின்படி, கோபம் தணிந்த பிறகும் கூட, ரத்த நாளங்கள் மீண்டும் பழைய நிலைக்கு திரும்ப சுமார் 40 நிமிடங்கள் ஆகின்றன. அதாவது, நீங்கள் எட்டு நிமிடம் காட்டும் ஆத்திரம், உங்கள் இதயத்தை கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் வரை போராட்டத்திலேயே வைத்திருக்கிறது.
இதயத்துக்கு எதிரி கோபம் தான்: நமக்கு கவலை அல்லது சோகம் ஏற்படும்போதும் மன அழுத்தம் உண்டாகிறது தான். ஆனால், இந்த ஆய்வில் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், சோகமும் கவலையும் ரத்த நாளங்களை கோபத்தை போல மோசமாக பாதிப்பதில்லை. கோபம் மட்டுமே நேரடியாக ரத்த நாளங்களின் விரிவடையும் திறனை பாதிக்கிறது.
ஒருமுறை கோபப்படுவதால் உடனே மாரடைப்பு வந்துவிடாது என்றாலும், அடிக்கடி கோபப்படுபவர்களின் ரத்த நாளங்கள் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்ப நேரமில்லாமல் போகிறது. இது நாளடைவில் ரத்த நாளங்களில் அடைப்புகளை (Plaque) உண்டாக்கி, உயர் ரத்த அழுத்தம், மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்பட வழிவகுக்கிறது. குறிப்பாக ஏற்கனவே இதய கோளாறு உள்ளவர்கள் கோபப்படும்போது, அது அவர்களின் உயிருக்கே ஆபத்தாக முடியலாம் என்பதற்கு இதுதான் காரணம்.
இந்த சூழலை நம் அன்றாட வாழ்வோடு ஒப்பிட்டு பார்த்தால், நாம் எவ்வளவு ஆபத்தில் இருக்கிறோம் என்பது புரியும். உதாரணமாக, அலுவலகத்தில் மேல் அதிகாரி திட்டும்போதோ அல்லது சாலையில் யாராவது குறுக்கே வரும்போதோ நாம் காட்டும் உடனடி கோபம் நம் உடலுக்குள் ஒரு மெதுவான நஞ்சாக மாறுகிறது.
இதய ஆரோக்கியம் என்பது வெறும் உடற்பயிற்சி மற்றும் உணவோடு முடிந்துவிடுவதில்லை, அது நம் மனநிலையைப் பொறுத்தும் அமைகிறது. அடிக்கடி கோபப்படுவதை தவிர்ப்பதன் மூலம், இதய நோய் வருவதற்கான ஆரம்பக்கட்ட அறிகுறிகளை தடுத்து நிறுத்த முடியும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள்.
கோபம் வரும் சூழலில் உடனே எதிர்வினையாற்றாமல், ஆழமாக மூச்சை உள்ளிழுத்து மெதுவாக விடுவது அல்லது அந்த இடத்தை விட்டு சற்று விலகி செல்வது போன்ற எளிய பழக்கங்கள் உங்கள் ரத்த நாளங்களை இறுக்கமடையாமல் பாதுகாக்கும். நடைப்பயிற்சி மற்றும் யோகா போன்ற எளிய உடற்பயிற்சிகள் மன அழுத்தத்தைக் குறைத்து, ரத்த ஓட்டத்தைச் சீராக வைக்க உதவும்.

