ஓசூர் அருகே ரூ.30 லட்சம் கடன் கொடுத்த நண்பனை கடத்திக் கொலை செய்த வழக்கில் 6 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையை அடுத்த கண்டகானப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் லட்சுமி நாராயணன் (34). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்துள்ளார்.
இவரும், மாரச்சந்திரம் கிராமத்தை சேர்ந்த மகேஷ்குமார் (38) என்பவரும் நண்பர்களாக இருந்துள்ளனர். இருவரும் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்த நிலையில், லட்சுமிநாராயணனிடம் மகேஷ்குமார் ரூ.30 லட்சம் கடன் பெற்றதாக தெரிகிறது. ஆனால், கூறிய தேதிக்கு மகேஷ்குமாரால் கடனை திருப்பி செலுத்த முடியவில்லை.
இதனால் லட்சுமி நாராயணன் தனது பணத்தை அடிக்கடி கேட்டு வந்துள்ளார். இதனால் ஒருகட்டத்தில் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், கடந்த 2017ஆம் ஆண்டு தேன்கனிக்கோட்டை நீதிமன்றத்திற்கு அருகே லட்சுமி நாராயணனை காரில் கடத்தி சென்ற ஒரு கும்பல், அவரை சம்பத் நகர் அருகே வெட்டி கொலை செய்தது.
இதுதொடர்பாக மகேஷ்குமார் உட்பட 7 பேரை தேன்கனிக்கோட்டை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கானது, ஓசூரில் உள்ள கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கு நடைபெற்று கொண்டிருந்த போதே ஒருவர் இறந்துவிட்டார். இதனிடையே, இவ்வழக்கில் வாத, பிரதிவாதங்கள் நிறைவடைந்த நிலையில், நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது.
வழக்கை விசாரித்த நீதிபதி சந்தோஷ், கொலை குற்றம்சாட்டப்பட்ட மகேஷ்குமார், ராஜ்குமார், வெங்கடாசலபதி, ஹரீஷ், சுரேஷ், சுரேஷ் ஆகியோரை குற்றவாளி என அறிவித்தார். மேலும், அவர்கள் அனைவருக்கும் இரட்டை ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். மேலும், அனைவருக்கும் தலா ரூ. 30,000 அபராதம் விதித்து உத்தரவிட்டார்.

