கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி அருகே 16 வயது சிறுமி உட்பட 2 பேர் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒரே குடும்பத்தில் இந்த இரட்டை கொலை நடந்துள்ளது.
பொள்ளாச்சி அருகே உள்ள கொண்டேகவுண்டன் பாளையத்தைச் சேர்ந்தவர் பூபதி. மெக்கானிக் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி கலையரசி. இந்த தம்பதியருக்கு 17 வயதில் ஒரு மகளும், 16 வயதில் ஒரு மகளும் இருந்துள்ளனர்.
இந்நிலையில், நேற்று வழக்கம் போல பூபதி வேலைக்கு சென்றுள்ளார். வீட்டில் கலையரசி, அவரது மகள்கள், பாட்டி மயிலாத்தா ஆகியோர் இருந்துள்ளனர். அப்போது மாலை 6 மணியளவில் திடீரென அவர்களின் வீட்டுக்குள் நுழைந்த இளைஞர் ஒருவர், 16 வயது சிறுமியை சரமாரியாக கத்தியால் குத்தியுள்ளார்.
இதனை தடுக்க வந்த பாட்டி மயிலாத்தாவையும், சிறுமியின் அக்காவையும் அந்த நபர் கத்தியால் குத்தினார். இவர்களின் அலறல் சத்தத்தை கேட்ட அக்கம்பக்கத்தினர், அங்கு விரைந்து வந்தனர். அவர்கள் வருவதை பார்த்த அந்த இளைஞர் அங்கிருந்து தப்பியோடிவிட்டார்.
பின்னர் வீட்டுக்கு வந்த அக்கம்பக்கத்தினர், ரத்த வெள்ளத்தில் கிடந்த 2 சிறுமிகள் உட்பட மூவரையும் பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், 16 வயது சிறுமியும், பாட்டி மயிலாத்தாவும் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். 17 வயது சிறுமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், இதுகுறித்த தகவலின் பேரில் போலீசார் அங்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, நெகமம் அருகே உள்ள கப்பளங்கரை பகுதியைச் சேர்ந்த அபிஷேக் (24) என்பவர் பூபதியின் 16 வயது மகளை காதலித்து வந்ததாராம்.
இதனிடையே, கடந்த சில நாட்களாக சிறுமியிடம் அபிஷேக் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இதற்கு சிறுமி மறுப்பு தெரிவிக்கவே, ஆத்திரத்தில் அவரது வீட்டிற்குள் புகுந்து அபிஷேக் இந்த பயங்கர செயலில் ஈடுபட்டுள்ளதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.
இதையடுத்து, இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், இளைஞர் அபிஷேக்கை தீவிரமாக தேடி வந்தனர். இந்த சூழலில், நெகமம் காவல் நிலையத்தில் நேற்று நள்ளிரவு அபிஷேக் சரணடைந்துள்ளார். அவரிடம் போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
காதல் விவகாரத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 பேர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

