பொதுவாக பழங்கள் என்றாலே வைட்டமின்கள் நிறைந்தவை, உடலுக்கு நல்லது என்றுதான் நமக்கு தெரியும். ஆனால், நம் உடலில் ஓயாமல் உழைத்து கொண்டிருக்கும் கல்லீரல் மற்றும் சிறுநீரகத்தை ஒரு சர்வீஸ் சென்டர் போல சுத்தப்படுத்தும் வேலையை சில குறிப்பிட்ட பழங்கள் செய்கின்றன.
நாம் உண்ணும் உணவில் இருக்கும் நச்சுகள், மருந்துகள் மற்றும் தேவையற்ற கழிவுகளை ரத்தத்திலிருந்து பிரித்தெடுக்கும் இந்த இரண்டு உறுப்புகளும் ஆரோக்கியமாக இருந்தால் மட்டுமே நம் ஆயுள் நீடிக்கும். இதற்காக நாம் கடைகளில் விற்கும் விலையுயர்ந்த டீடாக்ஸ் (Detox) பானங்களை நாட வேண்டிய அவசியமில்லை.
நம் ஊர் சந்தைகளில் எளிதாகக் கிடைக்கும் ஆப்பிள், எலுமிச்சை, பப்பாளி போன்ற பழங்களே அந்த வேலையை செவ்வனே செய்துவிடும். கல்லீரல் மற்றும் சிறுநீரகம் ஆகிய இரண்டும் உடலின் வடிகட்டிகள் போன்றவை. இவற்றை சுத்தமாக வைத்திருக்க உதவும் பழங்களை பற்றி பார்ப்போம். இந்த பழங்களை அன்றாட உணவில் சேர்த்து கொள்வதன் மூலம், எந்தப் பக்கவிளைவுகளும் இன்றி உடல் கழிவுகளை வெளியேற்றி, புத்துணர்ச்சியுடன் வைத்திருக்கும்.
ஃப்ளுபெர்ரி: ஃப்ளுபெர்ரி பழங்கள் பார்ப்பதற்கு சிறியதாக இருந்தாலும், அவற்றில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் கல்லீரலுக்கு பெரும் பாதுகாப்பை வழங்குகின்றன. இதில் உள்ள ஆந்தோசயனின் (Anthocyanin) என்ற நிறமி, கல்லீரல் வீக்கத்தை குறைப்பதோடு, அங்கு தேவையற்ற தழும்புகள் உருவாவதை தடுக்கிறது. சிறுநீரகத்தை பொறுத்தவரை, வயது முதிர்வினால் ஏற்படும் சிறுநீரக செயல்பாடு குறைபாட்டை இவை மெதுவாக்குகின்றன என்கிறது 2014ம் ஆண்டு வெளியான NIH ஆய்வு.
பப்பாளி: செரிமானத்திற்கு பப்பாளி நல்லது என்பது நம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று. ஆனால், அதையும் தாண்டி கல்லீரலில் தேங்கியிருக்கும் அம்மோனியா மற்றும் கன உலோகங்களை வெளியேற்ற பப்பாளியில் உள்ள பிளாவனாய்டுகள் உதவுகின்றன.
இதன் விதைகள் கூட கல்லீரல் தூய்மைக்குச் சிறந்த மருந்தாகப் பயன்படுத்தப்படுகின்றன. பப்பாளியில் நீர்ச்சத்து அதிகம் என்பதால், இது ஒரு இயற்கை சிறுநீர் பெருக்கியாகச் செயல்பட்டு, சிறுநீரகக் கழிவுகளை விரைவாக வெளியேற்றுகிறது.
திராட்சை: சிவப்பு திராட்சையின் தோலில் உள்ள ரெஸ்வரெட்ரோல் (Resveratrol) எனும் சத்து, கல்லீரல் செல்களில் ஏற்படும் பாதிப்புகளைச் சரிசெய்து, புதிய செல்கள் உருவாகத் தூண்டுகிறது. மேலும், இதில் உள்ள பொட்டாசியம் சத்து, சிறுநீரகத்தில் சோடியம் உப்பின் அளவைக் கட்டுப்படுத்தி, சிறுநீரகக் கற்கள் உருவாகும் வாய்ப்பைக் குறைக்கிறது.
மாதுளை: மாதுளை ரத்த ஓட்டத்தை அதிகரிப்பதோடு, சிறுநீரகத்தில் ஏற்படும் ஆக்சிஜனேற்ற அழுத்தத்தை குறைக்கிறது. டயாலிசிஸ் செய்து கொள்ளும் நோயாளிகளுக்குக் கூட மாதுளைச் சாறு சிறுநீரகப் பாதிப்பைக் குறைக்க உதவுவதாக NIH ஆய்வுகள் கூறுகின்றன. இது கல்லீரலில் கொழுப்பு படிவதை தடுத்து, வீக்கத்தைக் குறைக்கிறது.
அவகேடோ : அவகேடோ பழத்தில் உள்ள குளுதாதயோன் (Glutathione) எனும் பொருள் கல்லீரலில் உள்ள நச்சுகளை நடுநிலையாக்க உதவுகிறது. இது கல்லீரலைத் தூய்மைப்படுத்தும் என்சைம்களின் உற்பத்தியை அதிகரிக்கிறது. இதிலுள்ள பொட்டாசியம், ரத்த அழுத்தத்தைச் சீராக வைத்து, சிறுநீரகத்திற்கு அதிக அழுத்தம் ஏற்படாமல் பாதுகாக்கிறது.
எலுமிச்சை: காலையில் வெறும் வயிற்றில் எலுமிச்சை நீர் குடிக்கும் பழக்கம் பலருக்கு உண்டு. எலுமிச்சையில் உள்ள சிட்ரிக் அமிலம் கல்லீரலில் பித்தநீர் சுரப்பைத் தூண்டுகிறது. இது நாம் உண்ணும் கொழுப்பு மற்றும் நச்சுகளை எளிதில் செரிக்க வைக்கிறது. மேலும், சிறுநீரில் சிட்ரேட் அளவை அதிகரிப்பதன் மூலம் சிறுநீரகக் கற்கள் உருவாவதை இது ஆரம்பத்திலேயே தடுக்கிறது.
தர்பூசணி: தர்பூசணியில் உள்ள சிட்ருலின் என்ற அமினோ அமிலம், கல்லீரல் அம்மோனியாவை வடிகட்ட உதவுகிறது. கோடைக் காலங்களில் தர்பூசணி உண்பது சிறுநீரகத்திற்கு எந்தச் சிரமமும் கொடுக்காமல், சிறுநீர் போக்கை அதிகப்படுத்தி உடலில் உள்ள வெப்பத்தையும் கழிவுகளையும் வெளியேற்றுகிறது.
ஆப்பிள்: “தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் மருத்துவரிடம் போக தேவையில்லை” என்பது வெறும் பழமொழி மட்டும் இல்லை. ஆப்பிளில் உள்ள பெக்டின் எனும் நார்ச்சத்து, செரிமானப் பாதையில் உள்ள நச்சுகள் மற்றும் உலோகங்களைத் தன்னுடன் பிணைத்துக் கொண்டு வெளியேற்றுகிறது. இதனால் கல்லீரலின் வேலைப்பளு குறைகிறது. ஆப்பிள் சிறுநீரகத்தின் அமில-கார சமநிலையை சீராக வைக்கிறது.

