இன்றைய காலகட்டத்தில் ஆரோக்கியத்தின் மீது அதிக ஆர்வம் கொண்ட நாம், ‘சூப்பர் ஃபுட்’ (Super Food) என்று சொல்லப்படும் சத்துக்கள் நிறைந்த உணவுகளை தேடித் பிடித்து உண்கிறோம். அந்த வகையில் சமீபகாலமாகப் பலரது கவனத்தை ஈர்த்துள்ள ஒன்றுதான் ‘ஆலிவ் விதைகள்’ எனப்படும் ஹலீம் விதைகள் அதாவது தோட்டக் கீரை விதைகள் (Garden cress seeds).
இதில் இரும்புச்சத்தும், நார்ச்சத்தும் அதிகமாக இருப்பதால், ரத்தசோகை உள்ளவர்களுக்கும் முடி கொட்டும் பிரச்சனை இருப்பவர்களுக்கும் இது ஒரு அருமருந்தாகக் கருதப்படுகிறது. ஆனால், ஒரு பொருள் ஆரோக்கியமானது என்பதற்காக அதை எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம் என்று அர்த்தமல்ல. பலரும் ஆரோக்கியம் என்ற பெயரில் தினமும் ஒரு பெரிய ஸ்பூன் அளவு ஆலிவ் விதைகளைத் தங்கள் உணவில் சேர்த்து வருகிறார்கள்.
ஆனால், இந்த அதீத பயன்பாடு நன்மையை விட தீமையையே அதிகம் விளைவிக்கிறது. அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பது போல, இந்த சிறிய விதைகள் நம் உடலில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தும் வல்லமை கொண்டவை. எனவே, இவற்றை எப்படிச் சாப்பிட வேண்டும், யார் தவிர்க்க வேண்டும் என்பதை புரிந்துகொள்வது மிக அவசியம்.
பிரபல ஊட்டச்சத்து நிபுணர் பாலக் நாக்பால், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆலிவ் விதைகள் குறித்து ஒரு முக்கியமான எச்சரிக்கையை பகிர்ந்துள்ளார். பலரும் தினமும் ஒரு ஸ்பூன் அளவு ஆலிவ் விதைகளை சாப்பிட்டுவிட்டு, வயிறு பிரச்சனை ஏற்படுவதாக பலர் புலம்புவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
“ஒரு உணவு உங்களுக்கு நன்மையைத் தருமா அல்லது எரிச்சலைத் தருமா என்பதை நீங்கள் எடுத்துக்கொள்ளும் அளவுதான் தீர்மானிக்கிறது. மிகக் குறைந்த அளவில், ஊறவைத்து, சரியான உணவோடு சேர்த்து சாப்பிடும்போது இது உதவும். ஆனால், அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் குடல் அதை எதிர்க்க தொடங்கும். சில நேரங்களில் பிரச்சனை உணவில் இல்லை, நீங்கள் எடுத்துக்கொள்ளும் அளவில்தான் இருக்கிறது” என்கிறார்.
செரிமானப் கோளாறுகள்: ஆலிவ் விதைகளில் நார்ச்சத்தும், மியூசிலேஜ் எனப்படும் பிசுபிசுப்புத் தன்மையும் மிக அதிகம். இவற்றை அதிக அளவில் சாப்பிடும்போது, அவை குடலில் சென்று நொதித்தல் வினைக்கு உள்ளாகி, குடல் பகுதியில் அழுத்தத்தையும் அசௌகரியத்தையும் ஏற்படுத்துகின்றன.
ஊட்டச்சத்து நிபுணர் பாலக் இது குறித்துக் கூறும்போது, “குறைந்த அளவு ஆலிவ் விதைகள் குடலுக்கு ஆதரவைத் தரும், ஆனால் அதிக அளவு சாப்பிட்டால் குடலில் சுமை ஏறும். இது வயிறு உப்பசம், கனமான உணர்வு, வாயுத் தொல்லை, வயிற்றுப் பிடிப்பு மற்றும் சிலருக்கு வயிற்றுப்போக்கு அல்லது மலச்சிக்கலை ஏற்படுத்தக்கூடும்” என்று எச்சரிக்கிறார்.
தைராய்டு சுரப்பியில் பாதிப்பு: ஆலிவ் விதைகளை அதிகமாக சாப்பிடுவதால் ஏற்படும் மற்றொரு முக்கிய பாதிப்பு தைராய்டு சுரப்பி தொடர்பானது. இந்த விதைகளில் ‘கோய்ட்ரோஜென்ஸ்’ எனப்படும் கூட்டுப்பொருட்கள் உள்ளன. இவை நமது தைராய்டு சுரப்பி அயோடின் சத்தை உறிஞ்சுவதைத் தடுக்கின்றன. ரத்தத்தில் அயோடின் அளவு குறையும்போது, தைராய்டு ஹார்மோன் உற்பத்தியும் குறையத் தொடங்குகிறது.
இது ஹைப்போ தைராய்டிசம் (Hypothyroidism) உள்ளவர்களுக்குப் பாதிப்பைத் தீவிரமாக்கும் அல்லது ஆரோக்கியமானவர்களுக்குக் கூட தைராய்டு பிரச்சனையைத் தூண்டிவிடும். எனவே, தைராய்டு பாதிப்பு உள்ளவர்கள் இந்த விதைகளைத் தவிர்ப்பது அல்லது மருத்துவரின் ஆலோசனையுடன் மிகக் குறைந்த அளவு எடுப்பது நல்லது.
கர்ப்பிணிகளுக்கு உள்ள ஆபத்து: கர்ப்ப காலத்தில் ஆலிவ் விதைகளை அதிகமாகச் சாப்பிடுவது மிகவும் ஆபத்தானது. இந்த விதைகளுக்கு கருப்பை சுருக்கத்தை தூண்டும் தன்மை உண்டு. இதன் காரணமாக, கர்ப்பிணிப் பெண்களுக்குத் தேவையற்ற கருப்பைச் சுருக்கம் ஏற்பட்டு, கருச்சிதைவு உண்டாகும் அபாயம் உள்ளது.
மேலும், இது முன்கூட்டியே பிரசவம் (Premature delivery) ஏற்படுவதற்கும் காரணமாக அமையலாம். எனவே, கர்ப்பிணிப் பெண்கள் தங்கள் உணவில் ஆலிவ் விதைகளை சேர்ப்பதற்கு முன்பாகக் கண்டிப்பாகத் தங்கள் மருத்துவரிடம் ஆலோசனை பெற வேண்டும்.
ஆலிவ் விதைகளைச் சாப்பிட வேண்டிய சரியான முறை: ஆலிவ் விதைகளை எப்படிச் சாப்பிட வேண்டும் என்பதற்கான சரியான முறையையும் நிபுணர் பாலக் நாக்பால் பரிந்துரைத்துள்ளார். ஒரு நாளைக்கு 1/4 (கால்) தேக்கரண்டி அளவு விதைகளை மட்டும் எடுத்து தண்ணீரில் நன்றாக ஊறவைக்க வேண்டும். மேலும், இந்த விதைகளை பால், தேங்காய், நட்ஸ் அல்லது நெய் போன்ற ஏதேனும் ஒரு ஆரோக்கியமான கொழுப்புடன் சேர்த்து சாப்பிட வேண்டும்.
வாரத்திற்கு 3 முதல் 4 முறைகள் மட்டும் இப்படிச் சாப்பிடுவதே போதுமானது. ஆரோக்கியமான உணவு என்பதற்காக வரம்பில்லாமல் சாப்பிடக் கூடாது. சரியான அளவு மற்றும் சரியான உணவுடன் சாப்பிடும்போது மட்டுமே அது உடலுக்கு முழுமையான ஊட்டச்சத்தை வழங்கும் என்கிறார்.

