ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு ஆசை காட்டி ரூ.5 லட்சம் மோசடி செய்த விவகாரத்தில், இருவர் கைது செய்யப்பட்டனர்.
அரியலூர் மாவட்டம், இலந்தைக்கூடம் கிராமத்தைச் சேர்ந்தவர் சரவணன்வேல், இவரது மகன் சங்கர் கணேஷ் (41). பிசியோதெரபி மருத்துவர். சொந்தமாக கிளினிக் வைத்து நடத்தி வருகிறார். இவர், கடந்த 2025 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முகநூலில் ஒரு ஸ்டாக் மார்க்கெட் தொடர்பான விளம்பரத்தை பார்த்து அவர்களை தொடர்பு கொண்டுள்ளார்.
எதிர்முனையில் பேசிய மோதிலால் என்ற நபர் ஓஸ்வால் என்ற நிறுவனத்தை சேர்ந்த Raamdeo agarwal ஸ்டாக் மார்க்கெட் குறித்து இலவசமாக வகுப்பு எடுப்பதாகவும் இதில் முதலீடு செய்தால் 5% முதல் 20% வரை லாபம் எடுக்கலாம் என கூறியும் சில லிங்க்கை அனுப்பி உள்ளனர். மேலும் X MO Focus Forum என்ற வாட்சப் குழுவில் அவரை இணைத்துள்ளனர்.
பின்னர் மோசடிக்காரர்கள் கூறிபடி சங்கர் கணேஷ் ஒரு ஆன்லைன் செயலியை பதிவிறக்கம் செய்து அதில் வங்கி கணக்குகள் தொடர்பான விவரங்களை அளித்து Login செய்து 5000 ரூபாய் முதலீடு stock வாங்கி உள்ளார். சிறுக சிறுக குறிப்பிட்ட ஆன்லைன் செயலியில் மோசடிக்காரர்கள் கூறிய Stock -களில் சங்கர் கணேஷ் முதலீடு செய்து ரூபாய் 5 லட்சம் பணம் (5,00,000) அனுப்பி உள்ளார்.
ஒரு கட்டத்தில், சங்கர் கணேஷ் லாபம் அடைந்த 15.50 லட்சத்தை (1550000) Withdraw செய்ய முயற்சித்துள்ளார். அதற்கு அந்த செயலியில் IPO stock -ல் 20 லட்சம் பணம் முதலீடு செய்ய வேண்டும் என்று கூறியுள்ளனர். இதனால் சந்தேகம் அடைந்த சங்கர் கணேஷ் அரியலூர் மாவட்ட இணையக் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் 20.01.2026 அன்று புகார் அளித்தார். புகாரின் பேரில் அடிப்படையில் காவல் உதவி ஆய்வாளர் மணிகண்டன் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டார்.
இதுதொடர்பாக அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின்படி, இணைய குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் தலைமையில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் கடந்த 12.02.2026 அன்று இணைய மோசடி குற்றத்தில் ஈடுபட்ட திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த அபுதாகீர் (44) சென்னையைச் சேர்ந்த கார்த்திக் (30) ஆகிய இருவர் மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதனையடுத்து போலீசார் அவர்கள் இருவரையும் கைது செய்தனர்.
மேலும் அவர்களிடம் இருந்து 6 செல்போன்கள், 3 வங்கிக்கணக்கு புத்தகங்கள், 10 காசோலை புத்தகம், 10 டெபிட் கார்டுகள், 1 மடிக்கணினி, 2 போலி அலுவலக முத்திரைகள் மற்றும் ரூ.1400 பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். பின்னர், இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவின் படி சிறையில் அடைக்கப்பட்டனர்.

