தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக நிலவி வரும் கடும் பனிப்பொழிவு மற்றும் குளிர்ச்சியான வானிலை, பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையை வெகுவாக பாதித்துள்ளது. அதிகாலை மற்றும் இரவு நேரங்களில் நிலவும் இந்த கடும் குளிரால் சளி, இருமல் மற்றும் காய்ச்சல் போன்ற பாதிப்புகள் ஒருபுறம் அதிகரித்து வந்தாலும், மறுபுறம் ‘முகவாதம்’ (Facial Paralysis/Bell’s Palsy) போன்ற தீவிரமான பாதிப்புகள் ஏற்படும் அபாயம் குறித்து தமிழக பொது சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
பொதுவாக குளிர் காலம் என்றாலே சுவாச பை தொடர்பான பிரச்சனைகளை மட்டுமே நாம் பெரிதாக கருதுவோம். ஆனால், நரம்பு மண்டலத்தை சார்ந்த பாதிப்புகளும் இக்காலத்தில் தீவிரமடைய வாய்ப்புள்ளது என்பதை இந்த எச்சரிக்கை உணர்த்துகிறது. குறிப்பாக, பனிக் காலங்களில் தரையில் படுத்து உறங்குபவர்கள் மற்றும் நீண்ட தூரப் பயணம் மேற்கொள்பவர்கள் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டியது அவசியமாகிறது.
இது வெறும் தற்காலிக பாதிப்பு மட்டுமல்லாமல், அலட்சியமாக இருந்தால் நீண்ட காலப் பாதிப்பாக மாறவும் வாய்ப்புள்ளது. எனவே, நிலவும் தட்பவெப்ப சூழலுக்கு ஏற்ப நம் உடலைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டியதன் அவசியம் குறித்து விரிவாகக் காண்போம்.
தமிழகத்தின் தற்போதைய குளிர் சூழல்: தமிழகம் முழுவதும் தற்போது கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் நிலவும் இந்த அதீத குளிர் காரணமாக, அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் காய்ச்சல், இருமல் மற்றும் உடல் வலியால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இந்த சூழலில், முகவாதம் போன்ற பாதிப்புகள் குறித்து நோயாளிகளுக்கு தெளிவான விளக்கங்களை அளிக்குமாறு மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. குறிப்பாக, நீரிழிவு நோய் உள்ளவர்கள் மற்றும் முதியவர்கள் இந்த சூழலில் மிக எளிதாக பாதிப்புக்கு உள்ளாகக்கூடும் என்பதால், பிப்ரவரி மாதம் வரை பொதுமக்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்குமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.
குளிர்ந்த தரையும் முகவாத அபாயமும்: பொது சுகாதாரத்துறை விடுத்துள்ள எச்சரிக்கையில், குளிர்ந்த தரையில் படுப்பதன் ஆபத்து குறித்து விரிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. பலர் பாய், தலையணை போன்ற விரிப்புகள் இல்லாமல் நேரடியாக குளிர்ந்த தரையில் படுக்கும் பழக்கத்தை கொண்டுள்ளனர். இவ்வாறு படுக்கும்போது, குறிப்பாக ஒரு பக்க கன்னத்தை நேரடியாக குளிர்ந்த தரையில் வைத்து உறங்கும்போது, முகத்தின் நரம்புகள் அதிகப்படியான குளிர்ச்சி மற்றும் அழுத்தத்திற்கு உள்ளாகின்றன.
இந்த அழுத்தம் நரம்பு மண்டலத்தைப் பாதித்து முகவாதத்தை உண்டாக்குகிறது என Weather conditions and Bell’s palsy: five-year study and review of the literature என்ற தலைப்பில் வெளியான ஆய்வில் தெரியவந்துள்ளது. எனவே, தரையில் படுப்பவர்கள் போதிய விரிப்புகளைப் பயன்படுத்துவதுடன், கன்னம் மற்றும் காதுப் பகுதியில் நேரடி குளிர்ச்சி தாக்காதவாறு பார்த்துக் கொள்வது அவசியமாகும்.
முகவாதம் என்றால் என்ன? முகவாதம் என்பது முகத்திற்கு உணர்வளிக்கக்கூடிய நரம்புகளில் ஏற்படும் அழுத்தம் அல்லது வைரஸ் தொற்றால் ஏற்படக்கூடிய ஒரு பிரச்சனையாகும். முகத்தில் உள்ள தசைகளைக் கட்டுப்படுத்தும் நரம்புகளில் உள்காயம் ஏற்படும்போது அல்லது அழற்சி உண்டாகும்போது முகத்தின் ஒரு பகுதி செயல்விழக்கத் தொடங்குகிறது என்கிறது NIH ஆய்வு.
இது டெங்கு அல்லது சிக்குன் குனியா போன்ற பாதிப்புகளை போலவே தற்போதைய கடும் குளிரிலும் ஒருவருக்கு ஏற்பட வாய்ப்புள்ளது. ஒருவருக்கு முகவாதம் ஏற்பட்டால், அவரால் வாயைக் குவிக்க முடியாது, உதடுகள் ஒரு பக்கமாக இழுத்துக் கொள்ளும், மற்றும் ஒரு பக்கக் கண்ணை முழுமையாக மூட முடியாத நிலை ஏற்படும். மேலும், பேசும்போது வார்த்தைகள் குளறுவது மற்றும் வாயின் ஒருபுறம் எச்சில் வடிவது இதன் முக்கிய அறிகுறிகளாகும்.
பயணங்களின் போது ஏற்படும் பாதிப்புகள்: வீடுகளில் மட்டுமன்றி, பயணங்களின் போதும் முகவாதம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. குளிர் காலத்தில் கார், பேருந்து அல்லது ரயில்களில் பயணிக்கும்போது, ஜன்னல் வழியாக வரும் குளிர்ந்த காற்று நேரடியாக காது மற்றும் கன்னப் பகுதிகளில் நீண்ட நேரம் படும்படி அமர்வதைத் தவிர்க்க வேண்டும்.
அதிவேகமாக காதுக்குள் நுழையும் குளிர்ந்த காற்று நரம்புகளில் பாதிப்பை ஏற்படுத்தி முகவாதத்தை தூண்டும். குறிப்பாக இரவு நேரப் பயணங்களின் போது காதுகளை துணி அல்லது மப்ளர் கொண்டு மூடிப் பாதுகாப்பது மிகவும் நல்லது. குளிர்ச்சியான காற்றும் அதிகப்படியான ஈரப்பதமும் முகத் தசைகளை விரைப்படையச் செய்வதால் இந்தப் பாதிப்பு எளிதாக ஏற்படுகிறது.
முகவாதம் ஒருமுறை ஏற்பட்டுவிட்டால், அதிலிருந்து முழுமையாக குணமடைய சுமார் இரண்டு முதல் நான்கு மாதங்கள் வரை காலம் எடுக்கும். இதற்கு முறையான மருத்துவ சிகிச்சையும், பிசியோதெரபி போன்ற உடற்பயிற்சிகளும் தேவைப்படும்.
எனவே, பாதிப்பு ஏற்பட்டவுடன் சுய மருத்துவம் செய்யாமல் உடனடியாக மருத்துவரை அணுகுவது மிக முக்கியம். ஆரம்ப கட்டத்திலேயே கண்டறியப்பட்டால் பாதிப்பின் தீவிரத்தை குறைக்க முடியும். அரசு மருத்துவமனைகளில் இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும், புதிய பாதிப்புகள் கண்டறியப்பட்டால் உடனடியாகத் தகவல் தெரிவிக்கவும் சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
பாதுகாப்பாக இருப்பது எப்படி? இந்த குளிர் காலத்தை பாதுகாப்பாக கடக்க பொதுமக்கள் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்ற வேண்டும். வெளியே செல்லும்போது காதுகளை மூடும் வகையில் குல்லாய் அல்லது ஸ்கார்ஃப் அணியலாம். வீட்டில் தூங்கும்போதும் குளிர்ந்த காற்று நேரடியாக உடலில் படாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.
சத்தான உணவுகளை உண்பதன் மூலம் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரித்து வைரஸ் தொற்றுகளிலிருந்து தற்காத்துக் கொள்ளலாம். எவ்வகை உடல்நலப் பாதிப்பு ஏற்பட்டாலும், அது சாதாரணமானதாக இருந்தாலும், உடனடியாக மருத்துவ ஆலோசனையைப் பெறுவது எதிர்காலப் பேராபத்துகளைத் தவிர்க்க உதவும்.

