நீலகிரி மாவட்டத்தின் கூடலூரில், இன்று நடந்த பரப்புரைக் கூட்டத்தில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமிக்கு தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் மலர் தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர்.
2026 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னேற்பாடாக நடந்த இந்தக் கூட்டத்தில், எடப்பாடி, திமுக அரசை கடுமையாக விமர்சித்தார்.
கூட்டத்தில் பேசிய அவர் அதிமுகவை யாரும் அடிமையாக்க முடியாது. எங்கள் தொண்டர்களை எவராலும் பணிய வைக்க முடியாது. தேர்தல் களத்தில் அதிமுக முதலிடத்தில் உள்ளது, இரண்டாம் இடத்திற்குத்தான் போட்டி நடக்கிறது,” என்று கூறி, கட்சியின் வலிமையை வெளிப்படுத்தினார்.
மேலும் தொடர்ந்து பேசிய எடப்பாடி, திமுகவின் ஆட்சியை “குடும்ப ஆட்சி” என்று கடுமையாக விமர்சித்தார்.
திமுகவில் ஸ்டாலின் தனது மகன் உதயநிதியை புகழ்கிறார், உதயநிதி தனது தந்தையை புகழ்கிறார். இதுதான் குடும்ப ஆட்சி. அவர்களுடைய குடும்பத்தை தவிர திமுகவை யாரும் புகழ்ந்து பேசமாட்டார்கள்.
கடன் வாங்குவது, ஊழல், டாஸ்மாக்கில் ரூ.10 வாங்குவது, பொய் வாக்குறுதிகள் கொடுப்பது ஆகியவற்றில் திமுகவே முன்மாதிரி, என்று கூறினார்.
மேலும், மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றியது அம்மாவின் ஆட்சி. ஆனால், திறமையற்ற பொம்மை முதல்வர் ஆளும் திமுகவால் எந்தப் புதிய திட்டமும் இல்லை. ஊட்டியில் அதிமுக தொடங்கிய அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை திமுக ஸ்டிக்கர் ஒட்டி திறந்துவிட்டது,” என்று குற்றம்சாட்டினார்.
அதேபோல காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகையையும் எடப்பாடி விமர்சித்தார். யாசகம் கேட்பவர் சட்டையில் ஓட்டையை மறைப்பதற்கு ஒட்டு வைப்பது போல், செல்வப்பெருந்தகை காங்கிரஸை வளர்க்காமல் திமுகவை தாங்கிப் பிடிக்கிறார்.
காங்கிரஸுக்கு விசுவாசமாக இல்லாமல், திமுகவுக்கு விசுவாசமாக இருக்கிறார், என்று கூறினார்.
மேலும், திமுக கூட்டணியை நம்பியிருக்கிறது. ஆனால், அதிமுகவுக்கு கூட்டணி வேறு, கொள்கை வேறு. 8 கோடி மக்களை ஒரு குடும்பம் சுரண்டுவதை அனுமதிக்க முடியாது,” என்று திமுகவின் கூட்டணி அரசியலை சாடினார்.
அதிமுக ஆட்சியின் சாதனைகளை பட்டியலிட்ட எடப்பாடி, “கூடலூரில் ஏழை, எளிய மலை கிராம மாணவர்களுக்கு உயர்கல்வி கிடைக்க, அதிமுக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை தொடங்கியது.
2019-2020ல் உயர்கல்வி சேர்க்கையில் நாட்டிலேயே முதலிடம் பிடித்து அதிமுக சாதனை படைத்தது.
ஒரே ஆண்டில் 11 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளை தொடங்கியது எங்கள் ஆட்சி. ஆனால், திமுக 4 ஆண்டுகளில் ஒரு மருத்துவக் கல்லூரியைக் கூட கொண்டுவரவில்லை, என்றும் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

