பெங்களூரு நகரின் கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்திற்கு சென்றுகொண்டிருந்த ஒரு இண்டிகோ விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
வெடிகுண்டு மிரட்டல்
இண்டிகோ விமானம் ராஜஸ்தான் ஜெய்ப்பூரில் இருந்து பெங்களூரு நகரின் கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்திற்கு 175 பயணிகளுடன் சென்றுகொண்டிருந்தது. அப்போது விமானத்தின் கழிவறையில் மிரட்டல் குறிப்பு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதில் விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது. இதனைத்தொடர்ந்து விமான கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு விமானம் தரையிறக்கப்பட்டது.
பின்னர் மோப்ப நாய்கள், வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் விமானத்தில் ஆய்வு நடத்தினர். மேலும், இது தொடர்பாக மத்திய தொழில் பாதுகாப்பு படை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அதில் வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என்று தெரியவந்துள்ளது.

