நாடாளுமன்றத்தில் திமுக அதிமுகவால் இனி குரல் கொடுக்க முடியாது என புதிய தமிழகம் கட்சி நிறுவனர் கிருஷ்ணசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
கிருஷ்ணசாமி தாக்கு
ஸ்ரீவில்லிபுத்தூரில் புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் கிருஷ்ணசாமி இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், ‘தமிழ்நாட்டில் திமுக அரசு ஆட்சி பொறுப்பேற்று 15 மாதங்களில் தேர்தலில் 505 வாக்குறுதிகளை கொடுத்து எந்த ஒரு முக்கியமான வாக்குறுதியையும் காப்பாற்றவில்லை. குடும்ப பெண்களுக்கு 1000 ரூபாய், அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம், மின் கட்டண உயர்வை அதிகரிக்கிறார்கள் இந்த ஆட்சியில் மக்களுக்கு எந்த நன்மையும் செய்யாத அரசாக திமுக அரசு விளங்குகிறது. மத்திய அரசை மட்டுமே தமிழக அரசு குறைகூறும் அரசாக இருக்கிறது.
விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி, மதுரை உள்ளிட்ட பகுதிகளில் கவனம் செலுத்தி வேளாண்மை திட்டத்தை உருவாக்கி வேலைவாய்ப்பை உருவாக்க வேண்டும். இந்த பகுதிகளில் வேளாண்துறையால் நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும். விருதுநகரில் வரக்கூடிய ஜவுளி பூங்கா மக்களுக்கும், நிலத்துக்கும் பாதிப்பு இல்லாத சாயப்பட்டரை இல்லாத வகையில் அமைய உள்ளதா ? என்பதை மத்திய அரசு விளக்க வேண்டும்.
புதிய தமிழகம் கட்சி தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக குரல் கொடுத்து வருகிறது. தென் தமிழகத்தில் பெரிய வளர்ச்சி எதும் இல்லை. 3 வருடத்தில் எம்.பிக்கள் என்ன செய்தார்கள் என தெரியவில்லை. நாடாளுமன்றத்தில் இனி திமுக, அதிமுகவால் குரல் கொடுக்க முடியாது. அவர்கள் தேய்ந்து போன டேப்பரி கார்டாக மாறிவிட்டனர் என செய்தியாளர் சந்திப்பில் கூறியுள்ளார்.

