நடிகை சாந்தினி வழக்கை வாபஸ் பெற்றுக் கொள்வதாக அவரது வழக்கறிஞர் தெரிவித்தார்.
வழக்கு வாபஸ்
அதிமுக முன்னாள் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சராக இருந்தவர் மணிகண்டன். மணிகண்டன் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றியதாக நடிகை சாந்தினி அளித்த புகாரின் பேரின் அடையாறு அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் வழக்குப்பதியப்பட்டது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட மணிகண்டனுக்கு சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியிருந்தது. இந்த வழக்கு தொடர்பாக சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு வழக்கு நிலுவையில் இருந்து வந்தது.
இந்நிலையில், தனக்கு எதிரான வழக்கை ரத்து செய்யக்கோரி மணிகண்டன் சென்னை உயர்நீதிமன்றம் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில், இன்று நீதிபதி சதீஸ்குமார் அமர்வில் விசாரணைக்கு வந்த வழக்கில், நடிகை சாந்தினி வழக்கை வாபஸ் பெற்றுக் கொள்வதாக அவரது வழக்கறிஞர் தெரிவித்தார். இதையடுத்து நீதிபதி மணிகண்டன் தனது பெயருக்கு களங்கம் விளைவித்ததாக வழக்கு தொடர்ந்திருந்தால் என்னவாகும் ? என்று நடிகை சாந்தினி தரப்பிற்கு கண்டனம் தெரிவித்ததோடு, வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.

