சைபர் கிரைம் உதவி ஆய்வாளர் பாக்கியம் தலைமையிலான போலீசார் திருட்டு போன 15 லட்சம் மதிப்பிலான 110 செல்போன்களை மீட்டனர்.
செல்போன் திருட்டு
தேனி மாவட்டத்தில் கடந்த 1 ஆண்டுகளில் செல்போன் திருட்டு மற்றும் மாயமானதாக கூறி பல்வேறு புகார்கள் வந்துள்ளது. குறிப்பாக கடந்த 6 ஆண்டுகளாக காவல் நிலையங்களில் 1,365 புகார்கள் அளிகப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதிலும் இந்த ஆண்டு ஜனவரி மாதம் மட்டுமே 100 செல்போன்கள் திருட்டு போயுள்ளது. இதேபோன்று பிப்ரவரி மாதத்தில் 73 செல்போன்கள் காணவில்லை என்று புகார் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், இதில் ஜனவரி மாதத்தில் காணாமல் போன 100 செல்போன்களில் 47 செல்போன்கள் ஏற்கனவே மீட்கப்பட்டது.
ஆனால் மார்ச் மாதத்தில் 142 போன்களும், ஏப்ரல் மாதத்தில் 175 போன்களும், மே மாதத்தில் 147 செல் போன்களும், ஜூன் மாதத்தில் 126 போன்கள் என்று கடந்த 6 மாதங்களில் மட்டும் 763 செல் போன்கள் திருட்டு போயுள்ளது.

சைபர் கிரைம் விசாரணை
இந்நிலையில், தேனி மாவட்டத்தில் செல்போன் திருட்டு குறித்து வந்த புகார்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டோங்கரே பிரவின் உமேஷ் உத்தரவிட்டார். அதன்பெயரில் சைபர் கிரைம் உதவி ஆய்வாளர் பாக்கியம் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர். அதில் திருட்டுபோன சுமார் 15 லட்சம் ரூபாய் மதிப்பிலான 110 செல்போன்களை மீட்டனர். அதனையடுத்து மீட்கப்பட்ட செல்போன்கள் தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வைத்து, அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைத்தனர்.

செல்போன்கள் மீட்பு
அப்போது பேசிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டோங்கரே பிரவின் உமேஷ், ‘தேனி மாவட்டத்தில் கடந்த 6 மாதங்களில் செல்போன் காணாமல் போனதாக கூறி பல்வேறு காவல் நிலையங்களில் 1,365 புகார்கள் அளிகப்பட்டுள்ளது. இதில் ஏற்கனவே 714 செல்போன்கள் மீட்கப்பட்டு அவை உரிமையாளர்களிடம் ஒப்படைப்பட்டுவிட்டது. மேலும், தற்போது 110 செல்போன்கள் மீட்கப்பட்டு உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது’ என்று அவர் கூறினார்.

