சோழங்கநல்லூர் பகுதியில் சார்ஜ் போடப்பட்டிருந்த எலக்ட்ரிக் பைக் வெடித்ததால் வீடு முழுவதும் தீப்பற்றி வீட்டிலுள்ள இருந்த பொருட்கள் அனைத்தும் சேதமடைந்தன.
வெடித்து சிதறும் எலக்ட்ரிக் வாகனங்கள்
தற்போது நடைமுறை பயன்பாட்டில் இருக்கும் பேட்டரி ஸ்கூட்டர்கள் மக்கள் மத்தியில் நல்ல எதிர்பார்ப்பை பெற்றன. ஆயினும், செயலில் திருப்தி இல்லை. சில குறைபாடுகள் ஏற்படுவதாக பயன்பாட்டாளர்கள் சிலர் புகார் தெரிவித்துள்ளனர். இதனிடையே, இந்த புதுயுக எலக்ட்ரிக் பைக்குகள் சார்ஜ் போட்டிருக்கும் நேரங்களிலும், நடுரோட்டிலும் வெடித்து தீப்பற்றுவது மக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை அதிகம் உருவாக்குகிறது.

உயிர் தப்பினர்
சென்னையிலுள்ள சோழங்கநல்லூர் பகுதியில் ஈஸ்வரன் என்பவர் நேற்று முன்தினம் இரவி வேலைக்கு சென்றுவந்து தனது எலக்ட்ரிக் பைக்கின் பேட்டரியை கழட்டி சார்ஜ் போட்டுவிட்டு தூங்க சென்றுள்ளார். நள்ளிரவு ஒன்றரை மணியளவில் சார்ஜில் இருந்த பேட்டரி வெடித்ததில் வீடு முழுவதும் தீப்பற்றி வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தும் சேதமாகின. இதனைக்கண்ட ஈஸ்வரன் உடனே குடும்பத்துடன் வீட்டை விட்டு வெளியேறினார். உடனே வீட்டை விட்டு வெளியேறியதால் அவரும் அவரது குடும்பமும் உயிர் பிழைத்தனர்.
மற்றொரு சம்பவம்
இதே போல் ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் உள்ள குலாபி தோட்டா என்னும் பகுதியில் வசித்து வந்த சிவகுமார் என்ற நபர் புதியதாக எலக்ட்ரிக் பைக் ஒன்றை வாங்கியுள்ளார். அந்த பேட்டரி ஸ்கூட்டரை தனது வீட்டின் பெட்ரூமில் சார்ஜ் போட்டுவிட்டு உறங்கியுள்ளார். அதிகாலையில் தீடிரென சார்ஜில் இருந்த பேட்டரி வெடித்ததில், தீப்பற்றி வீட்டில் உள்ள பொருட்கள் எரிந்தன.

தீயில் மாட்டிக்கொண்ட சிவகுமார் அவரது மனைவி மற்றும் குழந்தைகளை அக்கம்பக்கத்தினர் மீட்டு, மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால், தீக்காயமடைந்த சிவகுமார் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இவ்வாறு வெடித்து சிதறும் எலக்ட்ரிக் வாகனங்கள் பொதுமக்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற கையோடு எதிர்ப்பையும் பெற்றுள்ளன.

