தஞ்சையில் திமுக எம்.எல்.ஏ அசோக் குமார் நடத்திய மொய் விருந்து விழாவில் 11 கோடி வசூலான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மொய் விருந்து
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி – பட்டுக்கோட்டை சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் திமுக எம்.எல்.ஏ அசோக் குமார், தனது பேரக்குழந்தைகளின் காதணி விழா நடைபெற்றது. இதில் மொய் விருந்து முறையும் நடத்தினார். இந்த விருந்துக்காக சுமார் 1,300 கிலோ மட்டன் குழம்பு, குடல் கூட்டு மற்றும் அரிசி சோறு சமைக்கப்பட்டிருந்தது. இந்த கறி விருந்து 10,000ம் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். விருந்தில் பங்கேற்றவர்கள் சாப்பிட்டு முடித்ததும் 1,000 ரூபாய் முதல் 5 லட்சம் ரூபாய் வரை தங்கள் வசதிக்கு ஏற்ப மொய் எழுதிச் சென்றனர். இதற்காக பணம் எண்ணும் இயந்திரத்துடன் 40 கவுண்ட்டர்கள் அமைக்கப்பட்டிருந்தன. இதில் 11 கோடி ரூபாய் மொய் பணம் வசூலாகி இருந்தது. தனிநபர் நடத்திய மொய் விருந்தில் இதுவே அதிகபட்ச வசூல் என்பது குறிப்பிடத்தக்கது.