ஆப்கானிஸ்தானில் பெண்கள் தங்களுக்கு எதிராக விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை நீக்க கோரி போராட்டம் நடத்திய பெண்களை தாலிபான்கள் அடித்து விரட்டிய பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானை கைப்பற்றி தாலிபான்கள்
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அமெரிக்காவின் பாதுகாப்பு அமைப்பான நேட்டோ படைகள் வெளியேறிய பிறகு ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் முழுமையாக கைப்பற்றி தங்கள் கட்டுக்குள் கொண்டு வந்தது மட்டுமின்றி ஆட்சி அதிகாரத்தையும் முழுமையாக கைப்பற்றி தாலிபான்கள்.

கடுமையான பல பிற்போக்கான சட்டங்களை தாலிபான்கள் அமல்படுத்தக்கூடும் என்ற அச்சத்தில் இருந்த மக்கள் ஆப்கானிஸ்தானை விட்டு ஏராளமான வெளியேறினர். அதில் பலர் விமானங்களில் தொங்கியபடி கூட்டம் கூட்டமாக பயணித்த காட்சிகளையும் தொலைக்காட்சி வழியாக உலக நாடுகள் பார்த்து ஆப்கானிஸ்தான் மக்களுக்காக இரக்கபட்டனர். ஆனால் தாலிபான்கள் தங்களின் முந்தைய ஆட்சி காலம் போல் தற்போதைய ஆட்சி இருக்காது என கூறினர்.
பிற்போக்கான சட்டங்கள்
முதலில் அவர்கள் சொன்னது போல் ஆட்சியை நடத்திய தாலிபான்கள் நாளடைவில் தங்கள் பழமைவாத கொள்கைகளை அமல்படுத்த ஆரம்பித்தனர். குறிப்பாக உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை புர்கா அணிய வேண்டும். பெண்கள் வேலை செல்லக்கூடாது. பெண்கள் வாகனங்கள் ஓட்டக்கூடாது. உணவகத்தில் ஆண்களும் பெண்களும் ஒன்றாக அமர்ந்து சாப்பிடக்கூடாது. 70 மைலுக்கு மேலான தொலை தூர பயணம் செய்யும் பெண்கள் கட்டாயம் ஆண் துணையுடன் தான் செல்ல வேண்டும். பெண்களுக்கான இடைநிலைக்கல்வி நிலையங்களை தாலிபான்கள் நிரந்தரமாக மூடினர். இப்படி பெண்களுக்கு எதிராக பழமைவாத கொள்கைகளை தாலிபான் அரசு நடைமுறைப்படுத்தியது.

இதனால் தாலிபான்களுக்கு எதிராகவும் அவர்களின் அடக்குமுறைகளை எதிர்த்தும் பெண்களுக்கான உரிமைகளை கிடைக்க வேண்டும் என முனைப்பு காட்டி வருகிறார் மொனிசா முபரேஸ். புதிதாக ஆட்சிக்கு வந்த தாலிபான் அரசின் புதிய அமைச்சரவையில் மகளிர் விவகார அமைச்சகம் துறை நீக்கப்பட்டுள்ளது. மொனிசா முபரேஸ் கூறுகையில், ‘ஆப்கானிஸ்தானில் ஒரு உள்நாட்டு போர் முடிந்து விட்டது. ஆனால், பெண்களுக்கான சரியான உரிமையை மீட்க உரிமை மீட்பு போராட்டம் இப்போதுதான் தொடங்கியிருக்கிறது. எங்கள் இறுதி மூச்சு இருக்கும் வரை பெண்களின் உரிமைகளுக்காக தொடர்ந்து குரல் கொடுத்துக்கொண்டே இருப்போம்’ என்றார்.
துப்பாக்கிகளால் தாக்கினர்
ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சி அமைத்து நாளையுடன் ஓர் ஆண்டு நிறைவடைகிறது. பெண்களுக்கான உயர் கல்வி உரிமையை பறித்தது ஆப்கானிஸ்தானில் உள்ள பெண்களுக்கு மட்டுமல்ல உலக நாட்டில் உள்ள அனைத்து மக்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபூலில் உள்ள கல்வி அமைச்சக கட்டிடம் முன்பு திடீரென போராட்டத்தில் பெண்கள் ஈடுபட்டனர். 40க்கும் மேற்பட்ட பெண்கள் கல்வி, வேலை, தங்களுக்கான சுதந்திர உரிமை கோரி கோஷம் எழுப்பினர். மேலும், ஆகஸ்ட் 15 ஆம் தேதி கருப்பு தினம் என்ற பேனர்களை பெண்கள் வைத்துத்திருந்தனர். அதுமட்டுமின்றி தங்களுக்கு வேலைவாய்ப்பு உரிமை, அரசியலில் உரிமை வேண்டும் என்றும் கோஷங்களை எழுப்பினர்.

பெண் போராட்டக்காரர்களை தாலிபான்கள் தடுத்து நிறுத்த முயன்றனர். ஆனால் போராட்டக்காரர்களை அடக்க முடியாததால் தாலிபான்கள் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு எச்சரித்தனர். துப்பாக்கி சத்தம் கேட்டு கலைந்து ஓடிய பெண்களில் சிலர் அருகில் இருந்த கடைகளுக்குள் செல்ல முயன்றனர். ஆனால், அவர்களை துரத்தி சென்று தாலிபான்கள் தங்களிடம் இருந்த துப்பாக்கிகளால் தாக்கினர்.
இந்த போராட்டத்தை படம் பிடிக்க சென்ற பத்திரிகையாளர்களையும் தாலிபான்கள் தாக்கினர். இந்த சம்பவத்தின் மூலம் ஆப்கானிஸ்தான் நாட்டில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

