Editor's Picksதமிழ்நாடு

திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை – விளாசும் அண்ணாமலை!

விருதுநகர் பட்டியலின பெண் பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து பாஜக சார்பில் அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் இன்று விருதுநகரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில் அக்கட்சியின் முன்னணி தலைவர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை, பாலியல் குற்றம் குறித்து பேசுவதற்கு திராணி இல்லாத கட்சி திமுக. திமுக மாநில மகளிர் அணி தலைவி கனிமொழி பட்டியலின பெண்ணிற்கு நியாயம் வேண்டும் என ட்விட்டரில் பதிவிடுகிறார். ஆனால், இரண்டு நிமிடங்கள் கழித்து அதை அவரே நீக்குகிறார். பின்னர் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு நியாயம் வேண்டும் என பதிவிடுகிறார் இப்படித்தான் தமிழக அரசியல் உள்ளது.

திமுக ஆட்சி பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத ஆட்சியாக மாறி உள்ளது. ஒவ்வொரு நாளும் நாம் படிக்கின்ற செய்தி முந்தையநாள் செய்தியை விட கோரமாக உள்ளது. பாரதிய ஜனதா கட்சி அரசியல் செய்வதற்காக இங்கு கூடவில்லை. 22 வயது இளம்பெண் ஒருவர் கொடூரமாக பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார். அவருக்கு ஆதரவாக பேச இங்கு யாரும் இல்லை அதனால் தான் அந்த இளம்பெண்ணுக்கு ஆதரவாக பாரதிய ஜனதா கட்சி களமிறங்கியது.

உடனடியாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்தியாவில் எந்த பாலியல் வழக்கிலும் கிடைக்காத தண்டனை இந்த வழக்கிற்கு கிடைக்கும் என அறிவித்துள்ளார். ஆனாலும் அடுத்தடுத்து பாலியல் குற்றங்கள் நடைபெறுகிறது.மக்களுக்கு திமுக ஆட்சியின் மீது நம்பிக்கை இல்லை” என திமுக அரசை கடுமையாக சாடி பேசினார்.

மேலும், “திமுகவினர் காவல்துறையை கட்டப்பஞ்சாயத்துக்கு பயன்படுத்துகிறார்கள். பக்கத்து மாநிலங்களில் நடைபெற்ற பாலியல் குற்றங்களுக்கு குரல் கொடுத்த திமுக மாநில மகளிர் அணி தலைவி கனிமொழி தனது பக்கத்து தொகுதியில் பட்டியலின பெண்ணிற்கு ஏற்பட்ட கொடுமைக்கு குரல் கொடுக்காதது ஏன். காவல்துறையை சீர்திருத்துவதற்காக நியமிக்கப்பட்ட கமிஷன் தலைவரின் பாதுகாவலருக்கு அரிவாள் வெட்டு என்று செய்தி வந்துள்ளது.அப்படி என்றால் யார் காவல்துறையை சீர்செய்வது” எனவும் கேள்வியெழுப்பியுள்ளார் அண்ணாமலை.

முன்னதாக, விருதுநகர் பெண் பாலியல் பெண்கொடுமை விவகாரத்தினை அரசு உடனடியாக விசாரித்து குற்றவாளிகளுக்கு மிக கடுமையான தண்டனைகளை பெற்றுத்தர வேண்டுமென அண்ணாமலை தமிழக அரசை வலியுறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Related posts