தமிழ்த்திரையுலகில் பொல்லாதவன் படத்தில் தொடங்கி அசுரன் வரை இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படங்கள் அனைத்துமே பெருவெற்றி பெற்றவை.
அதேபோல் தனது திரைப்படங்களுக்காக தேசிய விருது உள்ளிட்டவற்றை வாரி குவித்து வருபவர் வெற்றிமாறன். தான் இயக்கும் திரைப்படத்தின் கதை, திரைக்கதை உள்ளிட்டவற்றில் அதீத கவனம் செலுத்தும் வெற்றிமாறன், எளிய மனிதர்களின் வாழ்வியலை அப்பட்டமாக திரைமொழியில் பதிவு செய்யக்கூடியவர் எனவும் பெயர் பெற்றவர்.
அப்படியான வெற்றிமாறன், அவ்வப்போது சமூகம் சார்ந்த நிகழ்வுகள் குறித்தும் தனது கருத்துக்களை தெரிவிக்க கூடியவர். அப்படி, வெற்றிமாறன் தற்போது தெரிவித்த கருத்துக்களே தமிழ் சினிமா வட்டாரத்தில் பரபரப்பை கிளப்பியுள்ளது.
கேரளாவில் நடைபெறும் சர்வதேச திரைப்பட விழாவில் கலந்துகொண்டு பேசிய வெற்றிமாறன், இன்றைய உலகம் பிளவுபட்டுள்ளது. உங்கள் பாதையை நீங்கள்தான் தேர்ந்தெடுக்க வேண்டும். நீங்கள் இடதாக இருக்கலாம் அல்லது வலதாக இருக்கலாம். ஆனால், மையம் என்று எதுவுமில்லை. அப்படி நீங்கள் மையத்தை தேர்ந்தெடுத்தால் நீங்களுக்கும் வலதுசாரியே என தெரிவித்துள்ளார்.
முன்னதாக, சில தினங்களுக்கு முன்னர் வெளியான காஷ்மீர் பைல்ஸ் திரைப்படம் காஷ்மீர் பண்டிட்டுகளின் வரலாறை பேசுகிறது, அவர்களின் பூர்வீகத்திலிருந்து எப்படி வெளியேற்றப்பட்டார்கள் என்பதை கூறுகிறது என ஒரு சாராரும், இந்த திரைப்படம் மறைமுகமாக சிறுபான்மையினருக்கு எதிரான உணர்வுகளை பரப்புகிறதென ஒருசாராரும் கருத்துக்களை வெளியிட்டுவரும் சூழலில், இயக்குனர் வெற்றிமாறனின் மேற்கண்ட கருத்து திரையுலகினரின் கவனத்தை ஈர்த்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.