Editor's Picksதமிழ்நாடு

தமிழகம் வரும் ஈழத்தமிழர்களை பாதுகாப்போம் ; வேல்முருகன் உருக்கம்!

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் தமிழகத்திற்கு அகதிகளாக வரும் ஈழத்தமிழர்களை பாதுகாப்போம் ; அவர்களுக்கு அரணாக நிற்போமென தெரிவித்துள்ளார் தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது, இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி விழிபிதுங்கி நிற்கிறது. அமெரிக்க டாலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பு ரூ.284 ஆக வீழ்ச்சியடைந்திருக்கிறது. அங்கு அத்தியாவசியப் பொருட்களின் விலை பல மடங்கு அதிகரித்துள்ளது.

இலங்கையில் தற்போது ஒரு கிலோ அரிசி ரூ.290, சர்க்கரை ரூ.290, 400 கிராம் பால் பவுடர் ரூ.790 என்ற விலையில் விற்கப்படுகிறது. இதற்கெல்லாம் காரணம் இலங்கையில் ராஜபக்சே கும்பல் அரசின் அலட்சியமான அணுகுமுறையே.

பட்டினி சாவிலிருந்து எப்படித் தற்காத்து கொள்வது என தெரியாமல், கோத்தய கும்பலை வீட்டிற்கு செல் என்ற முழக்கத்துடன், அந்நாட்டு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான உணவு தட்டுப்பாடு, வேலையின்மை காரணமாக தமிழ்நாட்டிற்கு, யாழ்ப்பாணம், மன்னார் பகுதிகளைச் சேர்ந்த ஈழத்தமிழர்கள் தமிழ்நாட்டிற்கு வந்துள்ளனர். அடுத்து வரும் நாட்களில் மேலும், அதிக எண்ணிக்கையில் தமிழ்நாட்டிற்கு பலர் அகதிகளாக வருவதற்கான வாய்ப்புகள் உள்ளது.

எனவே, தமிழ்நாட்டிற்கு அகதிகளாக வரும் ஈழத்தமிழர்கள் போதுமான வசதிகளை ஏற்படுத்தி தர தமிழ்நாடு அரசு முன் வர வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி கேட்டுக்கொள்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் தமிழகத்திற்கு அகதிகளாக வரும் ஈழத்தமிழர்கள் குறித்து மத்திய அரசுடன் பேசிவருகிறோம். விரைவில் அவர்களுக்கான விடிவுகாலம் பிறக்குமென முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Related posts