தமிழ்நாடு

திமுக எங்களை மரியாதையாக நடத்தவில்லை – வேல்முருகன் வருத்தம்!

திராவிட முன்னேற்ற கழகத்தின் நம்பிக்கைக்குரிய கூட்டணி கட்சியாக தாங்கள் செயல்பட்டுவரும் போதிலும் திமுக நிர்வாகிகள் தனது கட்சியினை மரியாதையாக நடத்தவில்லை என வருத்தம் தெரிவித்துள்ளார் தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன்.

தமிழக அரசியல் களத்தில் கடந்த சில ஆண்டுகளாகவே திமுகவுடன் இணக்கமாக செயல்பட்டு வந்தது வேல்முருகன் தலைமையிலான தமிழக வாழ்வுரிமை கட்சி.  மேலும், கடந்த சட்டமன்ற தேர்தலில் திமுகவுடன் கூட்டணியும் மேற்கொண்டு பண்ருட்டி சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு வென்றார் அக்கட்சி தலைவர் வேல்முருகன்.

தேர்தலுக்கு பிறகு, வன்னியர்களுக்கான உள் ஒதுக்கீட்டு விவகாரம் போன்றவற்றில் வேல்முருகனின் கருத்துக்களுக்கும் திமுக தலைமை மதிப்பளிக்கவே செய்ததாகவும், அதனடிப்படையிலேயே வன்னியர்களுக்கான உள்ஒதுக்கீட்டு விவகாரம் தொடர்பாக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளதாகவும் வேல்முருகன் பேசி வந்தார்.

இந்நிலையில், சென்னையில் இன்று நடைபெற்ற அவரது கட்சியின் ஆலோசனை கூட்டத்தில் நிர்வாகிகள் மத்தியில் பேசிய வேல்முருகன், திமுக நிர்வாகிகள் தங்களது கட்சியினை மரியாதையாக நடத்தவில்லை எனவும், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் தங்களது கட்சிக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் திமுகவினரே போட்டியிட்டு வென்றது குறித்து திமுக தலைமை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும், திமுக கூட்டணியிலுள்ள காங்கிரஸ், விசிக, இடதுசாரி கட்சிகளுக்கு கொடுக்கப்பட்ட இடங்களில் வெற்றி பெற்ற திமுகவினர் முதல்வரின் உத்தரவுபடி பதவியை ராஜினாமா செய்துள்ள நிலையில், தங்களின் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் மட்டும் ராஜினாமா செய்யாமல் இருப்பது ஏன் எனவும் கேள்வியெழுப்பியுள்ளார் வேல்முருகன்

Related posts