உத்திரபிரதேசம், உத்திரகண்ட், பஞ்சாப், மணிப்பூர் மற்றும் கோவா ஆகிய 5 மாநில சட்டப்பேரவைகளில் பதிவான வாக்கு எண்ணிக்கையானது இன்று நடைபெற்று வருகிறது. மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கிடையே நடைபெறும் இந்த ஐந்து மாநில வாக்கு எண்ணிக்கையில் உத்திர பிரதேச மாநிலத்தில் ஆட்சியமைக்க தேவையான இடங்களில் முன்னிலை பெற்று அறுதிப்பெரும்பான்மை பெற்றுள்ளது பாரதிய ஜனதா கட்சி.
மேற்கண்ட ஐந்து மாநில சட்டப்பேரவைகளுக்கான தேர்தல் பரப்புரையில் பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட தேசிய கட்சிகளுடன், அந்தந்த மாநில பிராந்திய கட்சிகளும் மும்முரமாக பரப்புரையில் ஈடுபட்டன. குறிப்பாக, உத்திரப்பிரதேச சட்டப்பேரவை தேர்தலானது சிறப்பு கவனம் பெற்றிருந்தது. அதற்கான காரணம், அம்மாநிலத்தில் அதிக அளவிலான மக்களவை தொகுதிகள் இடம்பெற்றுள்ளதுவும், எதிர்வரும் 2024 மக்களவை தேர்தலில் இந்த சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடுமென்பதுதான்.
இந்நிலையில், உ.பி உள்ளிட்ட ஐந்து மாநில தேர்தலில் பதிவான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்றுவருகிறது. அதில், உத்திரபிரதேசத்தில், மொத்தமுள்ள 403 இடங்களில் சுமார் 200க்கும் மேற்பட்ட இடங்களில் முன்னிலை பெற்று ஆட்சியமைக்க தேவையான பெரும்பான்மை பெற்றுள்ளது பாஜக. அதேபோல், சமாஜ்வாதி 102 இடங்களிலும், பகுஜன் சமாஜ் 07 இடங்களிலும், காங்கிரஸ் 05 இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளன. இதன் மூலம் உத்திரபிரதேசத்தில் தொடர்ந்து இரண்டாவது முறையாக முதல்வர் பொறுப்பினை ஏற்க உள்ளார் ஆதித்யநாத்.
முன்னதாக, உத்திர பிரதேச தேர்தல் பிரச்சார சமயத்தில் பாஜக இங்கு வெற்றி பெற்றால் யோகி ஆதித்யநாத்தான் முதல்வராக தொடர்வாரென மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.