Editor's Picksதமிழ்நாடு

தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினுக்கு நன்றி – அற்புதம்மாள் உருக்கம்!

முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சுமார் 32 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்து வந்த பேரறிவாளனுக்கு நேற்றைய தினம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது உச்ச நீதிமன்றம்.

தமிழக அரசியல் கட்சிகளின் தலைவர் பலரும் மேற்கண்ட தீர்ப்பினை வரவேற்று கருத்துக்களை தெரிவித்துவரக்கூடிய நிலையில், பேரறிவாளனுக்கு ஜாமீன் கிடைக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள உதவிய அனைத்து தரப்பினருக்கும் நன்றி என உருக்கமாக தெரிவித்துள்ளார் பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் உட்பட 28 பேருக்கு அப்போது தூக்கு தண்டனை வழங்கியிருந்தது நீதிமன்றம். கடந்த 2014 ஆம் ஆண்டில் நீண்ட சட்ட போராட்டத்தின் காரணமாக பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.

அதனைத்தொடர்ந்து கடந்த 2016 ஆம் ஆண்டில், ராஜீவ் காந்தி கொலை வழக்கிலிருந்து தம்மை விடுவிக்க வேண்டுமென பேரறிவாளன் தரப்பில் நீதிமன்றத்தில் மனு செய்யப்பட்டிருந்த நிலையில், மேற்கண்ட வழக்கானது நேற்றைய தினம் உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, பேரறிவாளனுக்கு ஜாமீன் வழங்க கூடாதென தங்களது தரப்பு வாதத்தினை முன் வைத்தது மத்திய அரசு.

அதே சமயம், தமிழக அரசு சார்பில் முன் வைக்கப்பட்ட வாதத்தில் தண்டனை கைதி சுமார் 32 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்துள்ளார். சட்டப்படி ஆயுள் தண்டனை பெற்ற கைதிகளை விடுவிக்கும் சக்தி குடியரசுத் தலைவருக்கு கிடையாது . அது மாநில அரசுக்கு மட்டுமே உள்ளது.

ஆயுள் தண்டனை பெற்ற கோட்சே சகோதரர் 14 ஆண்டுகளில் விடுவிக்கப்பட்டாரே?. மாநில அரசு கோபால் கோட்சே போல் இல்லாமல் பேரறிவாளன் 32 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்திருக்கிறார். இந்த அதிகாரம் மாநில அரசுக்கு கீழ் வருகிறது. மாநில அரசு இதில் முடிவு எடுக்க முடியும். இதனால் மாநில அரசு நினைத்தால் ஆயுள் தண்டனை கைதிகள் போல இந்த வழக்கிலும் மன்னிப்பு வழங்க முடியும் என்ற பிரதிவாதம் வைக்கப்பட்ட நிலையில், தமிழக அரசின் வாதத்தினை ஏற்று பேரறிவாளனுக்கு ஜாமீன் வழங்கியிருந்தது உச்ச நீதிமன்றம்.

பேரறிவாளனுக்கு ஜாமீன் கிடைக்க தமிழக அரசு சார்பில் முன்வைக்கப்பட்ட வாதமே இன்றியமையாததாக இருந்த காரணத்தினால், தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினுக்கு நன்றி என உருக்கமாக தெரிவித்துள்ளார் அற்புதம்மாள்.

Related posts