ஈரான் மீது தரைவழித் தாக்குதலை நடத்த குர்தீஸ் மற்றும் பலூச் படைகளின் ஆதரவுக் கோர அமெரிக்க யோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் இராணுவக் கூட்டுப்படைகள் தொடர்ந்து தாக்குதலை நடத்தி வருகின்றன. சரணடைவதே ஒரே தீர்வு என்றும், இல்லையெனில் மிகவும் கடுமையான தாக்குதல் நடத்தப்படும் எனவும் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், ஈரான் அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதையடுத்து ஈரான் நாட்டில் உள்ள எண்ணெய் கிடங்குகள் மீது அமெரிக்க தாக்குதல் நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. போர் ஒருபுறம் தீவிரமடைந்துள்ள நிலையில், உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அத்துடன், மேற்காசிய நாடுகளில் பெட்ரோல், டீசல், எரிவாயு பற்றாக்குறை ஏற்படத் தொடங்கியுள்ளது.
அமெரிக்கா, இஸ்ரேல் போட்ட ப்ளான்:
ஈரான் ஆட்சியைக் கவிழ்க்க ஏற்கனவே அங்கு ஆயுதம் ஏந்திய பல்வேறு இனக்குழுக்கள் போராடி வருகின்றன. இந்த சூழலில் இவர்களின் ஆதரவு பெறும் முயற்சியிலும் அமெரிக்காவும், இஸ்ரேலும் திட்டமிட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. குறிப்பாக, இக்குழுக்களில் மிக முக்கியமானதான ஈரான் குர்துக்கள் அமைப்பு அமெரிக்க இராணுவத்தால் பயிற்சிப் பெற்று சிரியாவில் ஐஎஸ்ஐஎஸ்-க்கு எதிராகப் போராடியுள்ளது. இராணுவத்திற்கு நிகராக வலிமைப் பெற்ற இந்த குழு, ஈரான் நாட்டிற்கு உள்ளே இருந்தும், வெளியே இருந்து அந்நாட்டு அரசை எதிர்த்து வருகிறது.
நட்பு நாடுகள் மூலம் தாக்குதல் நடத்த திட்டம்:
ஈரான் உச்சத்தலைவர் காமேனியைத் தாக்குதல் மூலம் கொலை செய்துவிட்டால் அந்நாட்டு அரசில் வெற்றிடம் உருவாகும் என்ற அமெரிக்காவின் எண்ணம் தற்போது தவிடுபொடியாகிவிட்டது. காரணம், அந்நாட்டுக்கு எதிராகப் போராடும் இனக்குழுக்கள் தற்போது ஈரான் அரசை எதிர்த்தோ (அல்லது) வன்முறையைத் தூண்டவோ இல்லை; தொடர்ந்து அமைதி காத்து வருகிறது. குறிப்பாக, காமேனியைக் கொலை செய்துவிட்டால் முடிந்துவிடும் என்ற எண்ணத்தில் இருந்த அமெரிக்காவுக்கு போராக மாறி ஈரான் பிரபலமடையும் என்பதை எண்ணிப்பார்க்கவில்லை. எனினும், அமெரிக்காவும், இஸ்ரேலும் தங்கள் பிராந்தியத்தில் உள்ள நட்பு நாடுகள் மூலம் தரைவழித் தாக்குதலைத் தொடங்க யோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
யார் இந்த குர்துகள்?
ஈரான் நாட்டின் மக்கள்தொகையில் குர்துகளின் எண்ணிக்கை 10% ஆகும். ஈரானில் இஸ்லாமிய ஆட்சியை கவிழ்க்க வேண்டும் என்பதே இவர்களின் நோக்கம். அமெரிக்கா இராணுவம் மூலம் பயிற்சி பெற்ற குர்துகள் தரைவழி தாக்குதலைத் திறம்பட கையாளக் கூடியவர்கள். இதனால் இவர்கள் குர்தீஸ் படை என்று அழைக்கப்படுகிறார்கள்.
சிரியாவில் ஐஆர்ஜிசி வீரர்களுக்கு எதிராக தாக்குதலை நடத்திய ஐஎஸ்ஐஎஸ்-ஐ விரட்டியடித்தது இந்த குர்தீஸ் படை தான். அமெரிக்காவின் பினாமி போல் செயல்படும் குர்துகள், தற்போது ஈரான் நாட்டின் எல்லையில் காத்துக் கொண்டிருப்பதாகவும், ஈரானுக்குள் நுழைந்து தரைவழித் தாக்குதலை நடத்தத் தயாராக இருப்பதாகவும் தகவல் கூறுகின்றன.
ஆசாத் ஆட்சி வீழ்ச்சிக்கு பிறகு ஈரானுக்கும், துருக்கிக்கும் இடையில் குர்துகள் சிக்கிக் கொண்டனர். தற்போது குர்துகளுக்கு அருகிலேயே பலூச் மக்கள் இருப்பதால் அவர்கள் ஈரானுக்கு எதிராக திருப்பப்படுத்துவற்கான வாய்ப்புகளில் உள்ளனர். ஏன்னெனில், இந்தியாவின் ஆதரவுடன் பலூச் மக்கள், சுதந்திரம் வேண்டி பாகிஸ்தானுக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆப்கானிஸ்தானில் பின்னடைவை சந்தித்த அமெரிக்கா:
ஈரானுக்கு எதிராக குர்துகள் அல்லது பலூச் ஆகிய அமைப்புகளை ஏவினால் அது முழு பிராந்தியத்திலும் குழப்பத்தை ஏற்படுத்திவிடும். குறிப்பாக, ஆப்கானிஸ்தான் நாட்டில் அமெரிக்காவுக்கு நேர்ந்த கதி தான் ஈரானிலும் ஏற்படக்கூடும். தலிபான்களுக்கு எதிராக ஹசாராக்களுக்கு அமெரிக்க பயிற்சி கொடுத்தப் போதிலும் அது தோல்வியில் முடிந்தது. பின்னர் அமெரிக்கா சமாதான கொடியை காட்டியது. ஆப்கானிஸ்தானில் ஆட்சி அதிகாரத்தை தலிபான்கள் கைப்பற்றிய போது விலையுயர்ந்த ஆயுதங்களை அங்கேயே அமெரிக்க படைகள் விட்டுச் சென்றன. தலிபான்களை முன்பு நட்பு பாராட்டிய அமெரிக்கா, பின்னாட்களில் அவர்களை தீவிரவாதப் பட்டியலில் சேர்ந்திருந்தது. தலிபான் அமைப்புகளில் இருந்த முக்கிய தலைவர்கள் அனைவரும் அமெரிக்க பயங்கரவாதப் பட்டியலில் இருந்தனர்.
ஈரான் படைகள் குறித்து நன்கு அறிந்த குர்துகள்:
ஈரான் ஆட்சிக்கு பக்கப்பலமாக இருப்பது ஹவுஸ்-இ-கோம் மற்றும் ஹவுஸ்-இ-மஷாத் ஆகிய மத அமைப்பு தான். மேலும் ஈரானுக்கு உள்ளேயும், வெளியேயும் மத அமைப்புகள் மற்றும் அவற்றின் விரிவாக்கங்களுக்கு வணிக நிறுவனங்கள் நிதி அளித்து வருவதால் அவர்களுக்கு ஈரான் அரசு பல சலுகைகளை வழங்கி வருகிறது. இதனால் வணிக நிறுவனங்கள் ஈரான் அரசுக்கு கூடுதல் பலமாக உள்ளன.
ஈரானின் நிலப்பரப்பு மற்றும் ஐஆர்ஜிசி படைகள் குறித்து குர்தீஸ் படைகளுக்கு நன்கு தெரியும். அவர்களை கையாள்வதில் குர்தீஸ்களுக்கு அனுபவம் உண்டு. எனினும், ஈரானுக்குள் நுழைந்து குர்தீஸ் படைகள் தரைவழித் தாக்குதலை நடத்தும் பட்சத்தில் ஈரானின் உச்சத்தலைவர் காமேனியின் கொலைக்கு உடந்தையாக இருந்தவர்களாக அவர்களை ஈரான் இராணுவம் கருதும்.
அமெரிக்க ஆதரவைப் பெற பலூச் படைகள் ஆர்வம்:
பாகிஸ்தான் பிரிவினைவாத இயக்கத்தை நீண்டக் காலமாக பலூச் மக்கள் நடத்தி வருகின்றனர். குறிப்பாக, பாகிஸ்தானில் சீனா கொண்டு வரும் எந்தவொரு திட்டத்தையும் ஆதரிக்காதவர்கள். சீனாவை முழுமையாக எதிர்ப்பவர்கள் தான் பலூச் மக்கள்.அமெரிக்காவை நேசிக்கும் பலூச் மக்கள், அதன் ஆதரவையும் எதிர்நோக்கிக் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
ஒருவேளை அமெரிக்கா, பலூச் மக்களுக்கு சில வாக்குறுதிகள் அளிக்கும் பட்சத்தில் அவர்கள் ஈரானில் தரைவழி தாக்குதலை நடத்துவர். இது பாகிஸ்தானுக்கு தலைவலியையும், சர்வதேச அளவில் மிகப்பெரிய அழுத்தத்தையும் ஏற்படுத்தும். குறிப்பாக சொல்லவேண்டுமென்றால் அமெரிக்கா பலூச் படைக்கு அளிக்கும் வாக்குறுதிகள் பாகிஸ்தானுக்கு எதிரானதாகவே இருக்கும் என்றால் மிகையாகாது. ஈரானுக்கு எதிராக பலூச் படைகளை களமிறக்கும் அமெரிக்காவின் முடிவுக்கு இஸ்ரேல் எந்தவித மறுப்பும் தெரிவிக்காது.
அமெரிக்காவை நம்பி உயிரை விட்ட ஆப்கானியர்கள், ஆப்கானிஸ்தான் ஆட்சியை தலிபான்கள் கைப்பற்றிய போது ஆப்கானிஸ்தானில் இருந்து தப்பிக்க விமானங்களில் தொற்றிக் கொண்டு பறந்தக் காட்சி அனைவரது மனதிலும் இன்றும் உள்ளது.
அமெரிக்க நிபுணர்களின் கருத்து:
ஈரானில் உள்நாட்டு கிளர்ச்சி இல்லாமல் அந்நாட்டில் ஆட்சி மாற்றம் என்பது எளிதானவை அல்ல; இஸ்ரேல் தங்களுக்கு என்ன வேண்டும் என்ற முடிவில் தெளிவாக உள்ளது. ஈரான் உயிர்வாழப் போராடுகிறது; ஆனால் வாஷிங்டன் ஈரான் அரசைக் கவிழ்க்க உருவாக்கிய புதைக்குழியில் மூழ்கி வருவதாக அமெரிக்க நிபுணர்கள் கடுமையாக விமர்சித்துள்ளனர்.
ஈரான் போருக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான கோடி டாலரை செலவழிக்கும் அதிபர் ட்ரம்ப்பின் முடிவிற்கு அந்நாட்டின் செனட் உறுப்பினர்களே எதிராக உள்ளனர். நாடாளுமன்றத்தில் இது குறித்து தங்களது எதிர்ப்பையும் பதிவுச் செய்துள்ளனர். அமெரிக்காவிற்கு பலூச் மற்றும் குர்தீஸ் படைகள் துணை நிற்குமா? அல்லது அமெரிக்காவையே ஏமாற்றுமா? என்பது வரும் நாட்களில் தெரிந்துவிடும்.

