அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டுப்படைகள் இணைந்து ஈரான் மீது தொடர் வான்வழித் தாக்குதல்களை நடத்திவரும் சூழலில் ஈரானின் புதிய உச்சத்தலைவராக மொஜ்தபா காமேனி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி ஈரான் நாட்டின் தலைநகரான தெஹ்ரானில் அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டுப்படைகள் நடத்திய வான்வழித் தாக்குதலில் அந்நாட்டின் உச்சத்தலைவர் அயோதுல்லா காமேனி உயிரிழந்தார். அதைத் தொடர்ந்து ஈரான் மீது தொடர்ந்து 10 நாட்களாக தாக்குதல் நடைபெற்றுவரும் நிலையில் இதுவரை அங்கு பொதுமக்கள் 1000 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அரசு கூறியிருக்கிறது.
ஈரான் போர் காரணமாக உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. குறிப்பாக, பிரெண்ட் (brent) கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய் 110 டாலரை தாண்டியுள்ளது. கடந்த 2022ஆம் ஆண்டிற்கு பிறகு இப்போது மீண்டும் கச்சா எண்ணெய் விலை கணிசமாக உயர்ந்துள்ளது.
இந்த அசாதாரண சூழலில் ஈரானின் புதிய உச்சத்தலைவராக மறைந்த அயோதுல்லா அலி காமேனியின் மகன் மொஜ்தபா காமேனியை மதகுருமார்கள் தேர்வுச் செய்துள்ளனர். இதனால் வரும் நாட்களின் போர் தீவிரமடையும் என்று அஞ்சப்படுகிறது.
புதிய உச்சத்தலைவர் தேர்வு
ஈரான் உச்சத்தலைவர் அயதுல்லா அலி காமேனி கொலைச் செய்யப்பட்ட நிலையில் புதிய தலைவரைத் தேர்வு செய்வதற்கான மதகுருமார்கள் கவுன்சில் கூட்டம் நேற்று (மார்ச் 8) தலைநகர் தெஹ்ரானில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் 88 பேரின் ஆதரவுடன் 56 வயதான மொஜ்தபா காமேனி ஈரான் நாட்டின் புதிய உச்சத்தலைவராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் ஈரானின் ராணுவம் மற்றும் புரட்சிகரப் படைகளின் தலைமைப் பொறுப்பை ஏற்பார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
“எங்கள் உள்நாட்டு விவகாரங்களில் யாரும் தலையிடுவதை அனுமதிக்க முடியாது. இது முழுக்க முழுக்க ஈரானால் எடுக்கப்பட்ட முடிவு” என்று மதகுருமார்கள் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்கா, இஸ்ரேலின் எதிர்ப்பை மீறி மொஜ்தபா காமேனி, உச்சத்தலைவராகத் தேர்வுச் செய்யப்பட்டிருப்பது வளைகுடா நாடுகளில் மீண்டும் பதற்றத்தை உருவாக்கியுள்ளது. மொஜ்தபா காமேனிக்கு லெபனானில் செயல்பட்டு வரும் ஹிஸ்புல்லா அமைப்பு ஆதரவு தெரிவித்துள்ளது.
டிரம்ப் மன்னிப்பு கேட்க வேண்டும்
NBC செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்த ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அரக்சி, “போரைத் தொடங்கியதற்காக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், எங்கள் மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்” என்று பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.
எண்ணெய் ஆலைகளைத் தாக்கிய படைகள்
இந்நிலையில், ஒரே இரவில் தெஹ்ரானில் உள்ள 5 எண்ணெய் கிடங்குகள் மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் நான்கு அப்பாவி மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். எண்ணெய் கிடங்குகள் தீப்பிடித்து எரிந்ததால் அந்த பகுதி முழுவதும் கரும்புகை சூழந்தது. இதன் காரணமாக காற்றில் கந்தகம் மற்றும் நைட்ரஜன் ஆக்சைடுகள் கலந்துள்ளதால் மழையுடன் அமிலமும் சேர்ந்து அமில மழையாகப் பொழியும் என்று அந்நாட்டு மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
IRNA செய்தி நிறுவனத்திடம் பேசிய தெஹ்ரானின் ஆளுநர், “எண்ணெய் கிடங்குகள் மீது இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலால் எரிபொருள் விநியோகம் தற்காலிகமாக தடைப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.
சுவாசிக்க முடியாமல் மக்கள் அவதி
“எண்ணெய் கிடங்குகளில் பற்றிய தீ, சுமார் 12 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்தது. இதனால் பொதுமக்கள் காற்றை சுவாசிக்க முடியாமல் அவதிப்பட்டனர். குறிப்பாக, முதியவர்கள், நோய்வாய்ப்பட்டவர்கள் கடும் சிரமத்தை எதிர்கொண்டனர். மேலும், கடைகளுக்குச் சென்று பொருட்களை வாங்கமுடியாமல் வீட்டிலேயே முடங்கியுள்ளதாக அங்குள்ளவர்கள் கூறுகின்றனர்.

