மணிப்பூரில் குடியரசுத் தலைவர் ஆட்சி திரும்பப் பெறப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
வட கிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் கடந்த 2023-ம் ஆண்டு இரண்டு சமூகங்களுக்கு இடையே பெரிய அளவில் வன்முறை ஏற்பட்டது. இந்த வன்முறையில் 200-க்கும் மேற்பட்டவர்கள் இதுவரை உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், ஆயிரக்கணக்கானவர்கள் அங்கிருந்து வேறு மாநிலங்களுக்கு இடம் பெயர்ந்தனர். மணிப்பூரில் பாஜக ஆட்சி நடைபெற்று வந்த நிலையில், கலவரத்தை கட்டுப்படுத்த மத்திய அரசு எவ்வித நடவடிக்கையையும் எடுக்கவில்லை என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வந்தன.
மேலும், அப்போது மணிப்பூரை ஆண்ட பாஜக அரசு கலவரத்தை கட்டுப்படுத்த திணறிய நிலையில், அந்த மாநில முதல்வராக இருந்த பாஜகவை சேர்ந்த பிரேன் சிங் தனது பதவியை எதிர்க்கட்சிகளின் வற்புறுத்தலுக்கு இடையே 2025 பிப்ரவரி 9 ஆம் தேதி ராஜிநாமா செய்தார். அதைத் தொடர்ந்து மணிப்பூர் சட்டப் பேரவை முடக்கி வைக்கப்பட்டது. மேலும், பிப்ரவரி 13 ஆம் தேதி அந்த மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது.
இந்நிலையில், கடந்த ஒரு வருடமாக மணிப்பூரில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமலில் உள்ளது. ஆறு மாதங்களுக்கு ஒருமுறை குடியரசுத் தலைவர் ஆட்சி நீடிக்கப்பட்டு வரும் நிலையில், தற்போது மூன்றாவது முறையாக நீட்டிக்கப்பட வேண்டிய தேவை ஏற்பட்டது.
இதனிடையே, பாஜக ஆட்சி மீண்டும் அமைய வேண்டும் என அந்த மாநில பாஜக எம்எல்ஏக்கள் டெல்லி பாஜக தலைமைக்கு கடந்த சில மாதங்களாக தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வந்தனர். குறிப்பாக முன்னாள் முதல்வர் பிரேன் சிங், சட்டப் பேரவை தலைவர் சத்யபிரதா சிங், முன்னாள் அமைச்சர் கேம்சாந்த் சிங் உள்ளிட்டோர் மணிப்பூர் பாஜக மாநிலத் தலைவர் ஷாரதாவுடன் இணைந்து டெல்லியில் பாஜக தலைவர்களை நேரில் சந்தித்து மணிப்பூரில் மீண்டும் பாஜக ஆட்சி அமைக்க வலியுறுத்தியிருந்தனர்.
எம்எல்ஏக்களின் விருப்பதிற்கு செவி சாய்த்த டெல்லி பாஜக தலைமை, அந்த மாநில எம்எல்ஏக்களின் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தது. அதன்படி பாஜக சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டம் இம்பாலில் நேற்று நடைபெற்றது. அதில், பாஜக சட்டமன்ற கட்சி தலைவராக யும்னம் ஹேமந்த் சிங் தேர்வு செய்யப்பட்டார். இதனையடுத்து, மணிப்பூரில் குடியரசுத் தலைவர் ஆட்சி முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்த நிலையில், மணிப்பூரில் குடியரசுத் தலைவர் ஆட்சி திரும்பப் பெறப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சம் வெளியிட்டுள்ள அறிவிக்கையில், மணிப்பூரில் குடியரசுத் தலைவர் ஆட்சி விலக்கிக் கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், மணிப்பூர் மாநிலத்தில் ஆட்சி அமைக்க உரிமை கோரி யும்னம் ஹேமந்த் சிங் தலைமையிலான குழுவினர், ஆளுநர் அஜய்குமார் பல்லாவை இன்று சந்தித்தனர். இதனையடுத்து மணிப்பூரில் புதிய முதல்வராக யும்னம் ஹேமந்த் சிங் விரைவில் பதவியேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

