பல்கலைக்கழக துணை வேந்தர்களை மாநில முதல்வரே நியமிக்கும் சட்டத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் விதித்த தடையை நீக்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்கான துணை வேந்தரை மாநில முதல்வரே நியமிக்கும் வண்ணம் சட்டத்திருத்தம் செய்த தமிழக அரசு, அதனை ஒப்புதலுக்காக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு அனுப்பியிருந்தது. இந்த சட்டத்திருத்தம் உள்பட பல்வேறு மசேதாக்கள் ஆளுநர் மாளிகையில் நீண்ட காலமாக கிடப்பில் இருந்தது. இதை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில், இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் தனது சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி, 10 மசோதாக்களுக்கு அனுமதி வழங்கியது. இந்த 10 மசோதாக்களில் பல்கலைக்கழகங்களுக்கு துணை வேந்தரை மாநில முதல்வரே நியமிக்கலாம் என்ற சட்டத்திருத்தமும் அடங்கும்.
இந்நிலையில், மாநில முதல்வரே துணை வேந்தர்களை நியமிப்பதை எதிர்த்து உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்ட நிலையில், அதனை விசாரித்த நீதிமன்றம் இந்த சட்ட திருத்தத்துக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது. இதனை எதிர்த்து தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. சென்னை உயர் நீதிமன்றம் வழக்கை முழுமையாக விசாரிக்காமல் அவசரக்கோலத்தில் இடைக்கால தடை விதித்துள்ளதாக தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து துணை வேந்தர் நியமனம் தொடர்பாக உயர் நீதிமன்றம் பிறப்பித்த இடைக்கால தடையை நீக்கிய உச்ச நீதிமன்ற நீதிபதிகள், இந்த வழக்கை மீண்டும் விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டனர். ஆறு வாரத்தில் வழக்கை விசாரித்து முடிக்கவும், அதுவரை புதிய துணை வேந்தர்களை நியமிக்க கூடாது என்றும் உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

