ஆலங்குளம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுவதற்காக பனங்காட்டுபடை கட்சி தலைவர் ராக்கெட் ராஜா சொகுசு கேரவனில் வந்து மனுத்தாக்கல் செய்தார்.
வரும் சட்டமன்றத் தேர்தலில் தென்காசி மாவட்டம் ஆலங்குளம் சட்டமன்ற தொகுதியில் பனங்காட்டுபடை கட்சி தலைவர் ராக்கெட் ராஜா இந்த முறை தனித்து போட்டியிடுகிறார். இதனை முன்னிட்டு, தனி சொகுசு கேரவனில் ஆலங்குளம் வந்த அவர், அங்குள்ள மறைந்த முன்னாள் முதலமைச்சர் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பின்னர் ஆலங்குளம் வட்டாட்சியர் அலுவலகத்துக்கு சென்ற அவர், தேர்தல் நடத்தும் அலுவலர் ராமச்சந்திரனிடம் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். இதைத் தொடர்ந்து, அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறுகையில், “2026 தேர்தல் களத்தை நான் சந்திக்கிறேன். கடந்த தேர்தலில் ஆலங்குளம் சட்டமன்ற தொகுதியில் மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பு இருந்ததால் அதை விட்டுக்கொடுக்கக்கூடாது என்று இந்த முறை தேர்தலில் போட்டிடுகிறேன். திமுக, அதிமுக என எத்தனை கட்சிகள் வந்தாலும், தேசிய கட்சிகள் போட்டியிட்டாலும் என்னுடைய பலம் என்ன என்பது எனக்கும், என் மக்களுக்கும் தெரியும்.
ஆளுங்கட்சியினரும், எதிர்க்கட்சியினரும் எங்களை கூட்டணிக்கு அழைத்தார்கள். ஆனால், நாங்கள் கூட்டணிக்கு போக தயாராக இல்லை. ஆலங்குளத்தில் இந்த முறை பனங்காட்டுப் படை பெறும் வெற்றி, அடுத்தடுத்த தேர்தல்களில் பிற தொகுதிகளுக்கும் கொண்டு செல்லப்படும். ஆலங்குளத்தில் இருந்து எங்களுடைய வெற்றி தொடரும்.
ஆலங்குளம் தொகுதி மக்கள் தொண்டர்கள் அல்ல; என்னுடைய உறவுகள். பிற கட்சிகள் போல தேர்தலில் பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து மக்களை ஏமாற்றி விரும்பவில்லை. மக்கள் என்னைத் தேர்ந்தெடுத்தால் அவர்களுக்கு என்ன தேவையோ அதை நான் செய்து தருவேன்” என உறுதியளித்தார்.
யார் இந்த ராக்கெட் ராஜா?
நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே ஆனைக்குடி பகுதியைச் சேர்ந்தவர் ராக்கெட் ராஜா. மறைந்த கராத்தே செல்வின், வெங்கடேஷ் பண்ணையார் ஆகியோருக்கு நெருக்கமானவராக அறியப்பட்டார். இவர் மீது பல வழக்குகள் உள்ளன. இந்த சூழலில், திடீரென அரசியலில் குதித்த ராக்கெட் ராஜா, பனங்காட்டுப்படை என்கின்ற கட்சி ஒன்றை தொடங்கினார்.
கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் பனங்காட்டுப்படை கட்சி சார்பில் ஆலங்குளம் தொகுதியில் ஹரி நாடார் போட்டியிட்டார். அவருக்காக ராக்கெட் ராஜா தனி ஹெலிகாப்டரில் வந்து இறங்கி பிரச்சாரம் செய்தார். அந்த தேர்தலில் ஹரி நாடார் யாரும் எதிர்பார்த்திராத வகையில் 37,727 வாக்குகள் பெற்று நாம் தமிழர் கட்சியை பின்னுக்கு தள்ளி மூன்றாம் இடத்தை பிடித்தார்.
தற்போது ஆலங்குளம் தொகுதியில் ராக்கெட் ராஜாவே போட்டியிடுகிறார். இந்த தொகுதியில் திமுக சார்பில் முன்னாள் எம்எல்ஏ மனோஜ் பாண்டியன், அதிமுக சார்பில் முன்னாள் எம்.பி. பிரபாகரனும் போட்டியிடுகின்றனர்.

