இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான நல்லகண்ணு ஐயா அவர்களைப்போலவே நான் என் பொதுவாழ்க்கையிலும், தனிப்பட்ட வாழ்க்கையிலும் இருக்க விரும்புகிறேன் என தெரிவித்துள்ளார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை.
தமிழகத்தின் முன்னணி வார இதழ் ஒன்று, தற்போதைய தமிழக அரசியல் கட்சிகளின் தலைவர்கள் உள்ளிட்ட பிரபலங்களிடம் அவர்களின் மனம் கவர்ந்த தலைவர்கள் யார்? யாருடன் அமர்ந்து ஒன்றாக உணவருந்த வேண்டுமென நினைக்கிறீர்கள்? அப்போது குறிப்பிட்ட அந்த தலைவர்களிடம் கேட்க விரும்பும் கேள்விகள் என்ன? என்பது மாதிரியான நேர்காணல் நிகழ்ச்சி ஒன்றினை நடத்திவருகிறது.
அம்மாதிரியான நேர்காணல் ஒன்றில் பங்கேற்ற பாரதிய ஜனதா கட்சியின் தமிழக தலைவர் அண்ணாமலை, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருடன் தாம் ஒன்றாக உணவருந்தி உரையாட விரும்புவதாகவும், நல்லகண்ணு ஐயா அவர்களிடம் தனக்கு எந்த கேள்விகளும் இல்லை எனவும், அவரிடமிருந்து கற்றுக்கொள்ளவே ஏராளம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், தான் கொண்ட கொள்கைக்கு உண்மையாகவும், நேர்மையாகவும் உள்ளவர் நல்லகண்ணு ஐயா. இன்னும் இருபது ஆண்டுகள் கழித்து திரும்பி பார்க்கையில் நானும் எனது சித்தாந்தத்தில் அப்படியான நேர்மையான, எளிமையான வாழ்க்கை வாழ்ந்திருக்கிறேன் என அறியப்படுவதையே விரும்புகிறேன் எனவும் தெரிவித்துள்ளார் அண்ணாமலை.