மருமகனை அடித்து கொலை செய்த மாமனாருக்கு ஆயுள் தண்டனையும், 10 ஆயிரம் அபராதமும் விதித்து தூத்துக்குடி மாவட்ட முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டம், தாளமுத்துநகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மாப்பிள்ளையூரணி பகுதியில், கே.வி.கே சாமி நகரைச் சேர்ந்த ஹரிகுமார் (25) என்பவர் தனது மனைவியுடன் வசித்து வந்தார். இவரை குடும்ப பிரச்சனை காரணமாக அவரது மாமனாரான தூத்துக்குடி அண்ணாநகரைச் சேர்ந்த சுப்பிரமணி (58), அவரது உறவினரான சத்தியநாராயணன் (34) ஆகியோர் சேர்ந்து கட்டையால் அடித்துக் கொலை செய்தனர்.
கடந்த 2018 இல் நிகழ்ந்த இக்கொலை சம்பவம் குறித்து தாளமுத்துநகர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணையில் மேற்கொண்டு குற்றப்பத்திரிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். இவ்வழக்கின் விசாரணை தூத்துக்குடி மாவட்ட முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இந்த வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்டது. கொலை செய்யப்பட்டவரின் உறவினரான சத்தியநாராயணன் என்பவரை விடுதலை செய்தும், அவரது மாமனாரான சுப்பிரமணி என்பவரை குற்றவாளி என உறுதி செய்து, அவருக்கு ஆயுள்தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தும் நீதிபதி தாண்டவம் தீர்ப்பளித்தார். மேலும் இந்த கொலையை மறைத்த குற்றத்திற்காக 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தும், மேற்படி தண்டனைகளை ஏககாலத்தில் அனுபவிக்க உத்தரவிட்டும் தீர்ப்பு வழங்கினார்.
இவ்வழக்கின் சாட்சிகளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, குற்றவாளிக்கு தண்டனை பெற்று தந்த தூத்துக்குடி நகர உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் சுனில், இவ்வழக்கினை திறம்பட புலனாய்வு செய்த அப்போதைய தாளமுத்துநகர் காவல் நிலைய ஆய்வாளர் தங்ககிருஷ்ணன், அரசு தரப்பு வழக்கறிஞர் ஆனந்த் கேப்ரியல் ராஜ், வழக்கின் விசாரணைக்கு உதவியாக இருந்த தலைமை காவலர் சங்கரி ஆகியோரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சி.மதன் பாராட்டினார்.
தூத்துக்குடி மாவட்ட முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் இந்த ஆண்டு இதுவரை மொத்தம் 7 கொலை வழக்குகளில் சம்பந்தப்பட்ட குற்றவாளிக்கு தண்டனை வழங்கி தீர்ப்பு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

