நடிகர் தனுஷுக்கு பிரபல தயாரிப்பு நிறுவனமான ‘தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
கடந்த 2016 ஆம் ஆண்டு ‘நான் ருத்ரன்’ என்ற திரைப்படத்திற்காக நடிகர் தனுஷ் ஒப்பந்தம் செய்திருந்த நிலையில், திடீரென அந்த படத்திற்கு பதில், வேறு படத்தை நடித்து இயக்கி தருவதாக நடிகர் தனுஷ் கூறியுள்ளார்.
அதை ஏற்று தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம், தனுஷ் உள்பட படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருந்த நாகார்ஜுனா, எஸ்.ஜே. சூர்யா போன்ற நட்சத்திரங்களுக்கு முன் பணம், பிற செலவினங்களுக்காக 20 கோடி ரூபாய் வரை செலவிட்ட நிலையில், ஏற்கனவே ஒப்பந்தம் செய்தது போல தனுஷ் முழுமையான திரைக்கதையை வழங்கவில்லை.
பிற திரைப்படங்களுக்கு கால்ஷீட்டுகளை கொடுத்ததால், இந்த திரைப்படம் பாதியிலேயே முடங்கியதாகக் கூறி, தேனாண்டாள் பிலிம்ஸ் சார்பில் வழக்கறிஞர் ஏ. சிதம்பரம், நடிகர் தனுஷுக்கு வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
அதில், “2025 ஆம் ஆண்டு இறுதியில் கால்ஷீட் தருவதாக அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் விரைவில் தனுஷ் தனது முடிவை தெரிவிக்க வேண்டும். இல்லாவிட்டால், 20 கோடி ரூபாய் இழப்பை ஈடுகட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்துடன் இழப்பீடாக 1 கோடி ரூபாய் வழங்க வேண்டும். இல்லாவிட்டல் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்” என கூறப்பட்டுள்ளது.
கடந்த 2025 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் அனுப்பப்பட்ட இந்த நோட்டீஸ் தற்போது வெளியாகியுள்ளது.

