ஐபிஎல் 2026 தொடருக்கான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக ரியான் பராக் நியமிக்கப்பட்டுள்ளதாக அந்த அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.
இந்தியாவின் டி20 கிரிக்கெட் திருவிழா என்றழைக்கப்படும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 19 ஆவது சீசன் எதிர் வரும் மார்ச் மாதம் இறுதியில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த தொடருக்கான வீரர்கள் மினி ஏலமும் கடந்தாண்டு டிசம்பர் மாதம் நடைபெற்றது. இதில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த சஞ்சு சாம்சன் ஏலத்திற்கு முன்னதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் ரூ.18 கோடிக்கு டிரேடிங் முறையில் வாங்கப்பட்டார்.
அதே சமயம் சஞ்சுவுக்கு பதிலாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சிஎஸ்கே ஆல் ரவுண்டர்கள் ரவீந்திர ஜடேஜாவை ரூ.14 கோடிக்கும், சாம் கரணை ரூ.2.4 கோடிக்கும் டிரேடிங் செய்திருந்தது. இதனால் எதிர் வரும் ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக யார் செயல்படுவார் என்ற கேள்விகளும் அதிகரித்திருந்தன. ஏனெனில் அணியில் ரவீந்திர ஜடேஜா போன்ற அனுபவ வீரர் இருப்பதால் அவருக்கு தான் கேப்டன் பதவி வழங்கப்படும் என்றும் கூறப்பட்டது.
அதே சமயம் இளம் இந்திய வீரர்களான ரியான் பராக், யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் துருவ் ஜூரெல் ஆகியோரும் அடுத்த கேப்டனுக்கான ரேஸில் இருப்பதாகவும், அல்லது ஏற்கெனவே அணியை வழிநடத்திய அனுபவம் கொண்ட சர்வதேச வீரர்களான ஷிம்ரான் ஹெட்மையர் அல்லது டோனவன் ஃபெரீரா ஆகியோருக்கும் வாய்ப்பு இருப்பதாகவும் என தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில் தான், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியானது தங்கள் அணியின் கேப்டனை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி, எதிர் வரும் ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக ரியான் பராக் நியமிக்கப்பட்டுள்ளார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக கடந்த 2019 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் அறிமுகமான ரியான் பராக், தாற்போது வரையிலும் அந்த அணியின் ஒரு அங்கமாக செயல்பட்டு வருகிறார்.
இதுவரை அந்த அணிக்காக 84 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 7 அரைசதங்களுடன் 1,566 ரன்களைச் சேர்த்துள்ளார். இதுதவிர பந்துவீச்சிலும் 7 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். மேலும் கடந்தாண்டு சஞ்சு சாம்சன் காயம் காரணமாக முதல் சில போட்டிகளை தவறவிட்ட நிலையில், ரியான் பராக் பொறுப்பு கேப்டனாக சில போட்டிகளில் செயல்பட்ட நிலையில், தற்சமயம் அணியின் முழு நேர கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் பதவி வழங்கப்பட்டது குறித்து பேசிய ரியான் பராக், “ஐபிஎல்லில் எனது முதல் நாளிலிருந்தே ராஜஸ்தான் ராயல்ஸ் அணி எனது வீடாக இருந்து வருகிறது. இந்த அணி ஒவ்வொரு சீசனிலும் எனக்கு ஆதரவளித்து, என்னை வளர்த்துள்ளது.
தற்போது இந்த அணியை வழிநடத்தும் வாய்ப்பு எனக்கு கிடைத்துள்ளது மிகவும் சிறப்பு வாய்ந்தது, அதை நான் முழுமையாக ஏற்றுக்கொள்கிறேன். அச்சமற்ற, புத்திசாலித்தனமான கிரிக்கெட்டை விளையாடி, எங்கள் ரசிகர்களை பெருமைப்படுத்த எங்கள் பயிற்சியாளர்கள் மற்றும் தலைமைத்துவக் குழுவுடன் இணைந்து பணியாற்றுவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.” என்று கூறியுள்ளார்.

