மகளிர் பிரீமியர் லீக் 2026 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
மகளிர் பிரீமியர் லீக் தொடரின் 4ஆவது சீசன் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெறும் இறுதிப் போட்டியில் ஸ்மிருதி மந்தனா தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்த்து, ஜெமிமா ரோட்ரிக்ஸ் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது. இவ்விரு அணிகளுக்கும் இடையிலான இந்த போட்டி வதோதராவில் உள்ள பரோடா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இதில் முன்னாள் சாம்பியன்களான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி மீண்டும் சாம்பியன் பட்டத்தை வெல்லும் முனைப்புடனும், கடந்த மூன்று சீசன்களாக பட்டத்தை தவறவிட்ட டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி இம்முறை பட்டம் வெல்லும் உத்வேகத்துடனும் இந்த போட்டியை எதிர்கொள்ளவுள்ளன. இதன் காரணமாக எந்த அணி பட்டத்தை வென்று மகுடம் சூடும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு
ஸ்மிருதி மந்தனா தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, இந்த சீசனின் தொடக்கம் முதலே அபார ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் நேரடியாக இறுதிப் போட்டிக்கு முன்னேறி அசத்தியது. அணியின் பேட்டிங்கில் ஸ்மிருதி மந்தனா, கிரேஸ் ஹேரிஸ், ஜார்ஜியா வோல், ரிச்சா கோஷ் ஆகியோருடம், பவுலிங்கில் லாரன் பெல், ஸ்ரெயங்கா பாட்டில், நதின் டி கிளார்க் உள்ளிட்டோரும் இருப்பது அணிக்கு பெரும் பலமாக பார்க்கப்படுகிறது.
டெல்லி கேப்பிட்டல்ஸ்
மறுபக்கம் ஜெமிமா ரோட்ரிக்ஸ் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி நான்காவது முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறி அசத்தியுள்ளது.. அந்த அணியில் ஷஃபாலி வர்மா, லீசெல் லீ, லாரா வோல்வார்ட், மரிஸான் கேப், ஸ்ரீ சாராணி என நட்சத்திர வீராங்கனைகள் அணியில் இருப்பது பெரும் பலமாக பார்க்கப்படுகிறது. இதனால் இந்த சீசனில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றுமா என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
நேருக்கு நேர்
மகளிர் பிரீமியர் லீக் தொடரில் இவ்விரு அணிகளும் தலா 9 முறை பலப்பரீட்சை நடத்தியுள்ளன. இதில் டெல்லி கெப்பிட்டல்ஸ் அணி 6 போட்டிகளில் வெற்றியை பதிவு செய்து ஆதிக்கம் செலுத்தியுள்ளது. அதேசமயம் ஆர்சிபி அணி 3 வெற்றிகளை பெற்றுள்ளது. இதனால் இன்றைய போட்டியில் எந்த அணி வெற்றியை பதிவு செய்து ஆதிக்கம் செலுத்தும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது.
பரோடா கிரிக்கெட் சங்க மைதனாம்
வதோதராவில் உள்ள பரோடா கிரிக்கெட் மைதானம பெரும்பாலும் பவுலர்களுக்கு சாதகமான மைதானங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. மேலும் இங்கு இதுவரை நடைபெற்ற 5 டி20 போட்டிகளில் பேட்டிங் 2 போட்டிகளிலும், சேஸிங் செய்த அணிகள் 3 போட்டிகளிலும் வெற்றியை பதிவு செய்துள்ளன. இதனால் இங்கு டாஸ் வெல்லு கேப்டன் முதலில் பவுலிங்கை தேர்வு செய்வது வெற்றிக்கு வழி வகுக்கலாம்.
நேரலை ஒளிபரப்பு
மகளிர் பிரீமியர் லீக் தொடரின் அனைத்து போட்டிகளும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் நேரலையில் காணலாம். அதேசமயம் ஜியோ ஹாட் ஸ்டாரிலும் இத்தொடரை ஆன்லைனில் காண முடியும். இந்திய நேரப்படி போட்டி இரவு 7.30 மணிக்கு தொடக்க இருக்கும் நிலையில், டாஸ் நிகழ்வானது இரவு 7 மணிக்கு நடைபெறும்.

