பட்டியலினத்தை சேர்ந்த 20 ஊராட்சி தலைவர்களுக்கு தேசிய கொடியேற்ற அனுமதி மறுப்பு குறித்து அறிக்கை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அனுமதி மறுப்பு
சின்னசேலம், எடுத்தவாய்நத்தம் ஊராட்சி தலைவர் சுதா வரதராஜி, பட்டியலினத்தைச் சேர்ந்தவர் என்ற காரணத்தைச் சொல்லி சுதந்திர தினத்தன்று தேசியக் கொடியை ஏற்ற அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இது தொடர்பாக, கள்ளக்குறிச்சி கலெக்டருடன் மாநில துணைத் தலைவர் சம்பத், சுதா வரதராஜிவை நேரில் சந்தித்த பிறகு, இது தொடர்பாக புகார் மனு அளித்தனர். தற்போது அவர், சுதந்திர தினத்தன்று தேசியக் கொடியை ஏற்றலாம் என்ற உறுதியளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள பல மாவட்டங்களில் 386 ஊராட்சிகளில் ஆய்வு நடத்தப்பட்டது. அதில் பட்டியலினத்தைச் சேர்ந்த 20 ஊராட்சி தலைவர்களுக்கு சுதந்திர தினத்தன்று தேசியக் கொடியை ஏற்ற அனுமதி மறுக்கப்பட்டுள்ள செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. மேலும், 22 ஊராட்சிகளில், பட்டியலினத்தைச் சேர்ந்த ஊராட்சி தலைவர்களுக்கு அமர இருக்கை இல்லை. 42 ஊராட்சிகளில், ஊராட்சி தலைவர்களின் பெயர் பலகை வைப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது என தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

