சுதந்திர போராட்ட தலைவர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் அஸ்தியை ஜப்பானில் இருந்து கொண்டு வரக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்சநீதிமன்றம் விசாரிக்க மறுத்து விட்டது. அதே சமயம், சுபாஷ் சந்திர போஸின் மகள், நேதாஜியின் அஸ்தியை கொண்டு வர வேண்டும் என விரும்பினால், அவர் நீதிமன்றத்தை நாடலாம் என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக, சுபாஷ் சந்திர போஸின் பேரன்களின் ஒருவரான ஆஷிஷ் ராய் என்பவர், உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனு, உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி சூர்யகாந்த், நீதிபதிகள் ஜோய்மல்யா பக்சி, விபுல் எம்.பஞ்சோலி ஆகியோரைக் கொண்ட அமர்வு முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில் மூத்த வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி ஆஜரானார்.
அப்போது, “சுபாஷ் சந்திர போஸின் அஸ்தியை இந்தியாவுக்கு கொண்டு வருவது தொடர்பாக எத்தனை முறை இந்த நீதிமன்றம் விசாரிப்பது? இது போன்று ஏற்கெனவே தாக்கல் செய்த மனுக்களை நீதிமன்றம் நிராகரித்து விட்டது. நேரடியாகவோ, மறைமுகமாகவோ மீண்டும் மீண்டும் இதே கோரிக்கையுடன் மனுக்கள் தாக்கல் செய்யப்படுவது ஏன்? சுபாஷ் சந்திர போஸின் அஸ்தி எங்கே இருக்கிறது? அதற்கு என்ன ஆதாரம் உள்ளது?” என்று நீதிபதிகள் அடுக்கடுக்காக கேள்விகளை எழுப்பினர்.
அதற்குப் பதிலளித்த அபிஷேக் சிங்வி, “நேதாஜியின் ஒரே மகள் அனிதா போஸ். அவருக்கு 84 வயதாகிறது. அவர், காணொலி மூலம் ஆஜராகி உள்ளார். இந்தியாவில் இருந்து ஜப்பான் செல்லும் ஒவ்வொரு தலைவரும், அங்குள்ள ரெங்கோஜி கோயிலுக்குச் சென்று, அங்கு பாதுகாத்து வைக்கப்பட்டுள்ள நேதாஜியின் அஸ்திக்கு மரியாதை செலுத்துகிறார்கள்” என்று வாதிட்டார்.
அதற்கு, “நேதாஜி, இந்தியாவின் தலைசிறந்த தலைவர் தான். அதில் எந்த சந்தேகமும் இல்லை. அவருடைய தியாகத்திற்கு தலை வணங்குகிறோம். அதே சமயம், அவருடைய குடும்ப உறுப்பினர்களில் எத்தனை பேர் இன்னும் உயிருடன் இருக்கிறார்கள் என்பதை அறிய விரும்புகிறோம்” என்று நீதிபதி ஜோய்மல்யா பக்சி கேள்வி எழுப்பினார். அதற்கு, “நேதாஜியின் ஒரே மகள் அனிதா போஸ். அவர் காணொலி முறையில் ஆஜராகி உள்ளார்” என்று அபிஷேக் சிங்வி பதில் அளித்தார்.
அதைத் தொடர்ந்து, அனிதா போஸ் மனுதாரர் இல்லை என்பதை சுட்டிக் காட்டிய நீதிபதி ஜோய்மல்யா பக்சி, “அவர் விரும்பினால் நேரடியாக நீதிமன்றத்தை நாடலாம். அவருடைய கோரிக்கை மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். ஏனென்றால் இந்த விவகாரத்தில் நேதாஜி குடும்பத்தினருக்கு இடையே கருத்து வேறுபாடுகள் உள்ளன” என்று தெரிவித்தார்.
இதையடுத்து, அனிதா போஸ் சார்பில் கூடுதல் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய தயாராக இருப்பதாக அபிஷேக் சிங்வி தெரிவித்தார். அதற்கு “எங்களை உத்தரவும் பிறப்பிக்க கட்டாயப்படுத்த வேண்டாம்” என்று நீதிபதிகள் தெரிவித்தனர். அவர்கள் மனுவை விசாரிக்க விரும்பவில்லை என்பதை அறிந்து கொண்ட அபிஷேங் சிங்வி, மனுவை திரும்ப பெறுவதாக தெரிவித்தார். மேலும், நேதாஜியின் மகள் மனு தாக்கல் செய்வார் என்றும் அவர் தெரிவித்தார். அதன்படி, ஆஷிஷ் ராயின் மனு நிராகரிக்கப்பட்டது.

