தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு தவெக வரப் போவதாக செய்திகள் அடிபட்டு வரும் நிலையில், இதுகுறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்துள்ளார்.
திருச்சியில் நேற்று பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்ற பொதுக்கூட்டம் நிறைவடைந்ததும், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நட்சத்திர ஹோட்டலில் தங்கியிருந்தார். அப்போது அவரை மத்திய அமைச்சர்கள் பியூஷ் கோயல், எல்.முருகன் ஆகியோர் சந்தித்து பேசினர்.
இதைத் தொடர்ந்து, அங்கிருந்த செய்தியாளர்களை சந்தித்து எடப்பாடி பழனிச்சாமி பேசினார். அவர் கூறுகையில், “பியூஷ் கோயல் இரண்டு முறை என்னை பேசியது தொகுதிப் பங்கீடு சம்பந்தமாக அல்ல. தேர்தல் பணிகளை எவ்வாறு வகுப்பது என்பது குறித்தே பேசினோம். தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப்பட்டால் உங்களை (செய்தியாளர்கள்) அழைத்து சொல்லி விடுவோம்” என்றார்.
தொடர்ந்து, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தவெகவை கொண்டு வர பேச்சுவார்த்தை நடைபெறுகிறதா? என நிருபர்கள் கேள்வியெழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், “தவெகவிடம் கூட்டணி குறித்து பேசவில்லை. நீங்கள்தான் அப்படி ஒரு செய்தியை பரப்பிக் கொண்டு இருக்கிறீர்கள். நீங்களாக கற்பனை செய்து இவ்வாறு கேள்வி கேட்டால், நாங்கள் என்ன செய்வது? அப்படி எந்த பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை” என்றார்.
அப்போது நிருபர் ஒருவர், “விஜய்க்கு சிபிஐ நெருக்கடி கொடுக்கிறதா?” என கேட்டார். அதற்கு பதிலளித்த எடப்பாடி பழனிசாமி, “அது அவர்கள் (தவெக) பிரச்சனை. அதை அவர்கள் பார்க்கப் போகிறார்கள். அனைவரின் மீதும் தான் வழக்குகள் உள்ளன. எங்கள் மீதும் வழக்குகள் உள்ளன. நாங்கள் அதை சந்திக்க நீதிமன்றம் செல்கிறோம். அவர்களும் வழக்கை எதிர்கொள்வார்கள். மற்றபடி, மறைமுகமாக ஒரு அழுத்தம், நேரடியாக ஒரு அழுத்தம் எல்லாம் எப்படி கொடுப்பார்கள் எனத் தெரியவில்லை” எனக் கூறினார்.
தொடர்ந்து, திமுக ஆட்சி குறித்து பேசிய அவர், “எப்போது பார்த்தாலும் மத்திய அரசு எதையும் செய்யவில்லை என முதலமைச்சர் ஸ்டாலின் கூறுகிறார். ஆனால், பிரதமர் ஒவ்வொரு முறை இங்கும் வரும்போது வளர்ச்சிக்கான பல்வேறு திட்டங்களை கொடுக்கிறார்,.
பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும் தொடங்கியும் வைத்துள்ளார். மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக தரம் உயர்த்த தற்போது ஒப்புதல் கொடுத்துள்ளார். மக்கள் மத்தியில் திமுக ஆட்சியின் அவலங்களை எடுத்துக் கூறியுள்ளார். துரதிஷ்டவசமாக, ஸ்டாலினுக்கு ஆட்சிக் கட்டில் கிடைத்துள்ளது. எங்களை எதிர்த்து நேரடியாக மோத முடியாத காரணத்தால் அதிமுகவை தரம் தாழ்ந்து முதலமைச்சர் விமர்சிக்கிறார்” என எடப்பாடி பழனிசாமி கூறினார்.

