தமிழ்நாட்டின் பொறுப்பு ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் பதவி ஏற்றுக் கொண்டார்.
மேற்கு வங்க ஆளுநராக பதவி வகித்து வந்த சி.வி. அனந்த போஸ் தனது பதவியை கடந்த வாரம் திடீர் ராஜிநாமா செய்தார். அவரது ராஜிநாமாவை ஏற்றுக் கொண்ட குடியரசு தலைவர் திரௌபதி முர்மு, தமிழ்நாட்டில் ஆளுநராக பணியாற்றி வந்த ஆர்.என். ரவியை மேற்கு வங்க ஆளுநராக நியமனம் செய்து உத்தரவிட்டார்.
இதனையடுத்து, தமிழ்நாட்டிற்கு கேரள ஆளுநரான ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், கூடுதல் பொறுப்பு ஆளுநராக நியமனம் செய்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உத்தரவிட்டார்.
கடந்த 2021 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தமிழ்நாடு ஆளுநராக நியமிக்கப்பட்ட ஆர்.என். ரவி சுமார் நான்கரை ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். இந்த நிலையில் தமிழ்நாட்டில் தனது பணியை முடித்துக் கொண்ட ஆளுநர் ஆர்.என். ரவி, தனது கோப்புகளை ஒப்படைத்து விட்டு நேற்று சென்னையில் இருந்து புறப்பட்டுச் சென்றார். ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு சென்னை பழைய விமான நிலையம் பகுதியில், தமிழ்நாடு காவல் துறை சார்பாக மரியாதை அளிக்கப்பட்டு, தமிழ்நாடு காவல் துறை மற்றும் அரசின் உயர் அதிகாரிகள் மரியாதை உடன் வழி அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில், தமிழ்நாட்டுக்கு புதிய கூடுதல் பொறுப்பு ஆளுநராக நியமனம் செய்யப்பட்ட ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேகர் சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் (மக்கள் பவன்) இன்று பதவி ஏற்றுக் கொண்டார். தமிழ்நாடு அரசின் பொறுப்பு ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகருக்கு, சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
இந்த நிகழ்வில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தமிழ்நாடு சட்டப் பேரவை சபாநாயகர் அப்பாவு, அமைச்சர்கள், அரசு துறை செயலர்கள், முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர். மேலும் மத்திய இணை அமைச்சர் எல். முருகன், பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

