மதன் என்ற ஊர்காவல்படை காவலாளர் மனைவியுடனான தகராறில் உயிரை மாய்த்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .
மிஸ்டர் தமிழ்நாடு
சென்னை ராயபுரம் எம் எஸ் கோயில் தெருவை சேர்ந்தவர் மதன். இவர் கடந்த 2020 ஆம் ஆண்டு மிஸ்டர் தமிழ்நாடு ஆணழகன் போட்டியில் கலந்து கொண்டு இரண்டாம் இடத்தை பிடித்தார். இதனை தொடர்ந்து கடந்த 4 மாதங்களாக தண்டையார்பேட்டை காவல் நிலையத்தில் ஊர் காவலராக பணி புரிந்து வந்துள்ளார்.
மனைவியின் மேற்படிப்பு
மதன் தனது 5 வருட காதலியான ஹேமலதா என்ற பெண்ணை கடந்த டிசம்பர் மாதம் திருமணம் செய்துகொண்டார். இருவரும் தண்டையார்பேட்டையில் தனியாக வீடு எடுத்து குடித்தனம் நடத்தி வந்தனர்.
இந்நிலையில் மதனின் மனைவி ஹேமலதா உயர்படிப்பு படிக்க வேண்டும் என கணவரிடம் கூறியிருக்கிறார்.
இதனால் இருவரிடையே அடிக்கடி மனக்கசப்பு ஏற்பட்டுள்ளது. இந்த மனக்கசப்பின் உச்சமாக நேற்று ஹேமலதா மதனிடம் தனக்கு விவாகரத்து தருமாறு கேட்டிருக்கிறார்.
விவகாரத்தை தர மறுத்த மதன் தன் கட்டிய தாலியை கழட்டி தருமாறு கேட்டிருக்கிறார்.
விபரீத முடிவு
இந்நிலையில், நீண்ட நேரம் மதன் வெளியே வராததால் சந்தேகமடைந்த உறவினர்கள் மதனின் அறைக்கு சென்று பார்த்துள்ளனர். அங்கே மதன் தூக்கில் தொங்கியவாறு இருந்ததை கண்டு உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
உடனே உறவினர்கள் மதனை சென்னை ஸ்டாண்ட்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றிருக்கின்றனர். ஆனால் மதன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
உருக்கமான வீடியோ பதிவு
மதன் இறப்பதற்கு முன்னர் வீடியோ ஒன்றை தனது போனில் பதிவு செய்து அதனை நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு அனுப்பியுள்ளார்.
அந்த வீடியோவில் ‘நீ என்னிடம் விவாகரத்து கேட்டாய். நீ கேட்டதை தருகிறேன், தராமல் இருக்க மாட்டேன். என்னால் தான் உன் படிப்பு கெட்டு போகிறது. நீ இதற்கு முன் உன் தாய் வீட்டில் எப்படி இருந்தாயோ அப்படியே இனி சந்தோசமாக இருப்பாய். நான் கேட்ட தாலியை நீயே இன்னும் 12 மணி நேரத்தில் கழட்டி தருவாய். நீ தாலியை கழட்டும்போது நான் உயிரோடு இருக்க மாட்டேன்’ என உருக்கமாக பேசியிருக்கிறார்.