கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை கொலை செய்த மனைவி. கள்ளக்காதலை கண்டித்ததால் மனைவி துணிகர செயல்.
சேலம் மாவட்டம்
சேலம் மாவட்டம் மேட்டூரை அடுத்த காரைக்காடு கிராமத்தை சேர்ந்தவர் சக்திவேல், புகழரசி தம்பதியர். இவர்களுக்கு 8 வயதில் ஒரு ஆண் குழந்தையும், 6 வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளனர். குடிப்பழக்கம் கொண்ட சக்திவேல் அடிக்கடி மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், கடந்த திங்கட்கிழமை வழக்கம் போல் மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு விட்டு உறங்கச் சென்றுள்ளார். காலையில் அவரது மனைவி வந்து பார்த்தபோது மர்மமான முறையில் சக்திவேல் உயிரிழந்து கிடந்தார்.

விசாரணை
இது தொடர்பாக தகவல் அறிந்த கொளத்தூர் காவல்துறையினர் சம்பவ நடந்த இடத்திற்கு விரைந்து வந்தனர். சக்திவேல் உடலை மீட்டு பிரேத பரிசோதனைகாக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதனிடையே சக்திவேலின் தம்பி முத்துசாமி தனது அண்ணன் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகழரசி மீது சந்தேகம்
புகாரின் பேரில் விசாரணையைத் தீவிரப்படுத்திய போலீசாருக்கு சக்திவேலின் மனைவி புகழரசி மீது சந்தேகம் எழுந்தது. அவரை காவல்நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தியதில் 29 வயதான முத்துக்குமார் என்ற இளைஞருக்கும் புகழரசிக்கும் இடையே தகாத உறவு இருந்தது தெரியவந்தது. முத்துக்குமாரை காவல்நிலையம் அழைத்து வந்து விசாரித்த போது உண்மை தெரியவந்தது. புகழரசிக்கும், முத்துகுமாருக்கும் இடையே இருந்த கள்ளத் தொடர்பு சக்திவேலுக்கு தெரிய வந்து கண்டித்துள்ளார்.

பாலில் விஷம்
இதனால் ஆத்திரமடைந்த புகழரசி கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவனை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார். அதனைத் தொடர்ந்து விஷம் கலந்து பாலை சக்திவேலுக்கு கொடுத்துள்ளார். இருந்த போதிலும் சக்திவேல் உயிர் பிழைத்துக் கொண்டால் என்ன செய்வது என்று பயந்து, மீண்டும் விஷம் கலந்த உணவை சக்திவேலுக்கு மயக்க நிலையிலேயே கொடுத்து கொன்றதாக வாக்குமூலம் அளித்துள்ளார்.
இதையடுத்து புகழரசி மற்றும் முத்துக்குமாரை போலீசார் சிறையில் அடைத்தனர். கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவனை மனைவியே விஷம் வைத்து கொன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

