விஜய் களத்தில் உள்ளாரா? இல்லையா? என்பது தேர்தல் முடிவுகளுக்கு பின்னர் தான் தெரிய வரும். தீயசக்தி திமுகவை வீழ்த்தும் ஒரே இயக்கம் அதிமுக தான் என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் தெரிவித்தார்.
தவெக-வின் 3 ஆம் ஆண்டுத் தொடக்க விழா இன்று சென்னை பனையூரில் நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய தவெக தலைவர் விஜய் திமுகவை கடுமையாக விமர்சித்தார். அப்போது அவர், திருவள்ளுவர் இன்றைய டிஜிட்டல் காலத்தில் இருந்திருந்தால், திமுகவிற்கு தனி திருக்குறள் எழுதி இருப்பார். அது எப்படி இருக்கும் என்றால், ” அநீதி, அராஜகம், தில்லுமுல்லு இவையெல்லாம் திமுக முதற்றே உலகு” என குறிப்பிட்டார். மேலும், ” தேர்தல் களத்தில் எத்தனை சக்திகள், எத்தனை கட்சிகள் வந்தாலும், திமுகவை வீழ்த்த மாபெரும் மக்கள் சக்தியான நம்மால்தான் முடியும்” என்றார்.
இந்நிலையில், இதற்கு எதிர்வினையாற்றியுள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார், ” தீயசக்தி திமுகவை வீழ்த்தும் ஒரே இயக்கம் அதிமுக தான்” என தெரிவித்தார்.
அதிமுக, அம்மா பேரவை சார்பில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. எதிர்க்கட்சித் துணைத் தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஆர்.பி உதயகுமார் தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில், முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இதில், மறைந்த முன்னாள் முதல்வரும், முன்னாள் அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதாவின் 78 வது பிறந்தநாள் விழாவை கொண்டாடுவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. பின்னர் வரும் சட்டமன்ற தேர்தலில் எடப்பாடி பழனிசாமியை மீண்டும் தமிழ்நாட்டின் முதல்வராக அமர்த்திட வேண்டும் என்று கூட்டத்தின் வாயிலாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தின் முடிவில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய ஆர்.பி உதயகுமார் தவெக தலைவர் விஜயின் பேச்சு குறித்து பல்வேறு கருத்துகளை தெரிவித்தார்.
அதன்படி, ” பாஜக தலைமையில்தான் அதிமுக கூட்டணி உள்ளது என்று விஜய் விமர்சித்துள்ளார். அதைப் பற்றி அவர் கவலைப்படவும், விவாதிக்கவும் தேவையில்லை. இந்த கருத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கத் தேவையில்லை. எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றுள்ளவர்கள்தான் அதைப்பற்றி கவலைப்பட வேண்டும். கூட்டணியிலேயே இல்லாத விஜய், இது தொடர்பாக கருத்து கூறுவது எந்த வகையில் நியாயம்?
விஜய் தேர்தல் களத்தில் உள்ளாரா? இல்லையா? என்று மக்கள் தான் தீர்ப்பு சொல்ல வேண்டும். மக்கள் தீர்ப்புக்குப் பிறகு யார் களத்தில் உள்ளார்கள்? யார் காணாமல் போனார்கள்? என்று தெரியும்.
திமுகவை வீழ்த்தும் சக்தி யாரிடம் இருக்கிறது என்று தனிப்பட்ட ஒரு கட்சி தலைவரின் (விஜய்) விருப்பத்தை நாம் முடிவாக எடுத்துக் கொள்ள முடியாது. திமுக எப்பொழுதெல்லாம் ஆட்சியில் தவறு செய்கிறதோ, அப்போதெல்லாம் அதை தட்டி கேட்டு அவர்களை வீழ்த்துகிற தகுதியும், மக்கள் செல்வாக்கும் கொண்டுள்ள ஒரே இயக்கம் அதிமுக. தீயசக்தி திமுகவை வீழ்த்தும் ஒரே இயக்கம் அதிமுக.
எம்ஜிஆரையும், ஜெயலலிதாவையும் விஜய் புகழ்வதற்கு காரணம், இவர்கள் இருவரையும் தவிர்த்து விட்டு அரசியல் களத்தில் யாரும் தங்களை அடையாளப்படுத்திக் கொள்ள முடியாது. அவர்களின் தியாகத்தை தவிர்த்து விட்டு தமிழ்நாட்டில் அரசியல் களத்தில் அடையாளப்படுத்த முயற்சித்தால் அது தோல்வியில்தான் முடியும்.” என்றார்.

