பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்கள் நாளை (24 ஏப்ரல், 2022) காலை 11:30 மணியளவில் தேசிய ஊராட்சி தின கொண்டாட்டத்தில் பங்கேற்பதற்காக ஜம்மு & காஷ்மீர் பயணத்தை மேற்கொள்கிறார்.
சம்பா மாவட்டத்தில் உள்ள பள்ளி பஞ்சாயத்துக்கு அவர் செல்வதாகவும், நாடு முழுவதும் உள்ள அனைத்து கிராம சபைகளிலும் உரையாற்ற இருப்பதாகவும், இந்த பயணத்தின் போது சுமார் 20,000 கோடி ரூபாய் மதிப்பிலான பல வளர்ச்சித்திட்ட முயற்சிகளை பிரதமர் தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டுவார் எனவும் பிரதமர் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.
ஜம்மு & காஷ்மீரில் பிரதமர்:
3100 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட பனிஹால் – காசிகுண்ட் சாலை சுரங்கப்பாதையை பிரதமர் திறந்து வைக்கிறார். 8.45 கிமீ நீளமுள்ள இந்த சுரங்கப்பாதை பனிஹால் மற்றும் காசிகுண்ட் இடையே உள்ள சாலை தூரத்தை 16 கிமீ குறைக்கும். பயண நேரத்தை சுமார் ஒன்றரை மணி நேரம் குறைக்கும். இது ஒரு இரட்டைக் குழாய் சுரங்கப்பாதை (பயணத்தின் ஒவ்வொரு திசைக்கும் ஒன்று).
பராமரிப்பு மற்றும் அவசரகால வெளியேற்றத்திற்காக ஒவ்வொரு 500 மீட்டருக்கும் இரட்டைக் குழாய்கள் குறுக்கு வழியில் ஒன்றோடொன்று இணைக்கப்படுகின்றன. இந்த சுரங்கப்பாதையானது ஜம்மு மற்றும் காஷ்மீர் இடையே அனைத்து வானிலை தொடர்பை ஏற்படுத்தவும், இரு பகுதிகளையும் நெருக்கமாக கொண்டு வரவும் உதவும்.

ரூ. 7500 கோடி ரூபாய் செலவிலான டெல்லி-அமிர்தசரஸ்-கத்ரா விரைவுச் சாலையின் மூன்று சாலைப் பொதிகளுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார். இந்த அதிவேக நெடுஞ்சாலையானது NH-44 இல் உள்ள பல்சுவாவிலிருந்து குர்ஹா பைல்தரன், ஹிராநகர் வரை; ஹிராநகர் முதல் ஜாக், விஜய்பூர் வரை மற்றும் ஜாக், விஜய்பூர் முதல் குஞ்ச்வானி வரை, ஜம்முவிலிருந்து ஜம்மு விமான நிலையத்துடன் இணைக்கப்படும்.
ரட்லே மற்றும் குவார் நீர்மின் திட்டங்களுக்கும் பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார். கிஷ்த்வார் மாவட்டத்தில் செனாப் ஆற்றில் சுமார் 5,300 கோடி ரூபாய் செலவில் 850 மெகாவாட் திறன் கொண்ட ரேட்டில் நீர்மின் திட்டமும், ரூ. 4500 கோடி செலவில் 540 மெகாவாட் திறன் கொண்ட குவார் நீர்மின் திட்டமும் பிராந்தியத்தின் மின் தேவைகளை பூர்த்தி செய்ய உதவும்.
ஜம்மு & காஷ்மீரில் உள்ள ஜன் ஔஷதி கேந்திராக்களின் வலையமைப்பை மேலும் விரிவுபடுத்தவும், நல்ல தரமான ஜெனரிக் மருந்துகளை மலிவு விலையில் கிடைக்கச் செய்யவும், 100 கேந்திராக்கள் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டு பிரதமரால் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்படும். இந்த மையங்கள் ஒன்றியப் பகுதியின் தொலை மூலைகளில் அமைந்துள்ளன.

மேலும், அவர்பள்ளி எனும் கிராமத்தில் 500 கிலோவாட் சூரிய சக்தி ஆலையை திறந்து வைக்கிறார் பிரதமர். இது நாட்டின் முதல் கார்பன் நியூட்ரலாக மாறும் பஞ்சாயத்து ஆகும்.
திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு SVAMITVA அட்டைகளை பிரதமர் வழங்குவார். தேசிய ஊராட்சிகள் தினத்தில் பல்வேறு பிரிவுகளில் விருதுகளை வென்ற ஊராட்சிகளுக்கு அவர்களின் சாதனைகளுக்காக விருதுத் தொகையை வழங்குவார். பிராந்தியத்தின் கிராமப்புற பாரம்பரியத்தை சித்தரிக்கும் INTACH புகைப்பட தொகுப்பு மற்றும் இந்தியாவில் சிறந்த ஸ்மார்ட் கிராமங்களை உருவாக்க வடிவமைக்கப்பட்ட கிராமப்புற தொழில்முனைவோர் அடிப்படையிலான மாதிரியான Nokia Smartpur ஐயும் பிரதமர் பார்வையிடுவார்.
அம்ரித் சரோவர்:
பிரதமர் மோடியின் ஜம்மு & காஷ்மீர் வருகையின் போது, இந்திய நாட்டின் விடுதலை அடைந்த 75வது ஆண்டு விழா(பவள விழா) அம்ரித் சரோவர் கொண்டாட்டத்தை நோக்கிய அரசின் முன்னெடுப்பாக இருக்கிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும் 75 நீர்நிலைகளை மேம்படுத்தி புத்துயிர் அளிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ள புதிய முயற்சியையும் தொடங்கி வைக்கிறார்.
மும்பையில் பிரதமர்:

நாளை மாலை சுமார் 5 மணிக்கு மும்பையில் நடைபெறும் மாஸ்டர் தீனாநாத் மங்கேஷ்கர் விருது வழங்கும் விழாவில் பிரதமர் கலந்து கொள்கிறார். முதலாவது லதா தீனாநாத் மங்கேஷ்கர் விருது பிரதமர் மோடி அவர்களுக்கு வழங்கப்படவுள்ளது. பாரத ரத்னா லதா மங்கேஷ்கரின் நினைவாக நிறுவப்பட்ட இந்த விருது, தேசத்தை கட்டியெழுப்புவதில் சிறந்த பங்களிப்பிற்காக ஒவ்வொரு ஆண்டும் ஒருவருக்கு பிரத்யேகமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

