மேற்காசியாவில் நிலவும் அசாதாரண சூழல் குறித்து ஓமன் சுல்தான், மலேசியா பிரதமர் அன்வர் இப்ராஹிம், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் ஆகியோருடன் தொலைபேசி வாயிலாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.
குவைத், துபாய், கத்தார், சவூதி அரேபியா, அபுதாபி உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் உள்ள எல்பிஜி எரிவாயு ஆலைகள், கச்சா எண்ணெய் உற்பத்தி ஆலைகள், கச்சா எண்ணெய் சேமிப்புக் கிடங்குகள் உள்ளிட்டவற்றின் மீது ஈரான் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகிறது. அத்துடன், கச்சா எண்ணெய் வயல்களிலும் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளது.
கச்சா எண்ணெய் உற்பத்தி பாதிப்பு, மேற்காசியாவில் நிலவும் அசாதாரண சூழல் காரணமாக உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய் 118 டாலராக உயர்ந்துள்ளது. ஈரானின் நடவடிக்கையால் உலக நாடுகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இந்த சூழலில், மேற்காசியாவில் நிலவும் அசாதாரண சூழல் குறித்து ஓமன் சுல்தான் ஹைதம் பின் தாரிக் (Haitham bin Tariq), மலேசியா பிரதமர் அன்வர் இப்ராஹிம், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் ஆகியோருடன் இன்று (மார்ச் 19) தொலைபேசி வாயிலாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி பேசினார். அப்போது, மேற்காசியாவில் நிலவும் சூழல் குறித்து தலைவர்களுடன் விவாதித்த பிரதமர் மோடி, மோதலைத் தணிப்பதற்கும், அமைதி மற்றும் ஸ்திரத்தன்மை மீட்டெடுப்பதற்கும் தனது ஆதரவை தெரிவித்துள்ளார். அதேபோல், ஹார்முஸ் ஜலசந்தி வழியாக பாதுகாப்பான முறையில் தடையற்ற கப்பல் போக்குவரத்தின் அவசியத்தையும் வலியுறுத்தினார்.
இது குறித்து பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் தளப்பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “சகோதரர் ஓமன் சுல்தான் ஹைதம் பின் தாரிக் உடன் தொலைபேசி வாயிலாகப் பயனுள்ள கலந்துரையாடலை மேற்கொண்டேன். ஓமன் மக்களுக்கு ஈகை திருநாள் வாழ்த்துகளைத் தெரிவித்தேன். ராஜதந்திர ரீதியில் பேச்சுவார்த்தை மூலம் மோதலைத் தணிப்பதற்கும், அமைதி, ஸ்திரத்தன்மையை மீட்டெடுப்பதற்கும் நடவடிக்கை எடுக்க நாங்கள் ஒப்புக்கொண்டோம். இந்திய நாட்டினர் உட்பட ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பாகத் தாயகத்திற்கு அனுப்பி வைத்த ஓமன் அரசுக்கு பாராட்டு தெரிவித்தேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
அதேபோல், பிரதமர் நரேந்திர மோடியின் மற்றொரு பதிவில், “மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம் உடனான உரையாடலின் போது மலேசியா மக்களுக்கு ஈகை திருநாள் வாழ்த்துகளைத் தெரிவித்தேன். மேற்காசியாவில் நிலவும் கவலைக்குரிய நிலைமைக் குறித்து நாங்கள் விவாதித்தோம். பேச்சுவார்த்தையின் மூலம் மோதலைத் தணிக்க வேண்டும், அமைதி, ஸ்திரத்தன்மையை மீட்டெக்க வேண்டும் என்ற எங்களது உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினோம்” என்று குறிப்பிட்டுள்ளார். இதே கருத்தையே பிரதமர் நரேந்திர மோடி, பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானிடம் முன்வைத்தார்.
ஈரான் போர் தொடங்கியதில் இருந்தே பிரதமர் நரேந்திர மோடி, ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன், சவூதி அரேபியா, ஜோர்டான், ஈரான் உள்ளிட்ட பல உலக நாடுகளின் தலைவர்களுடன் பேசியுள்ளார். இதனிடையே, மனிதாபிமான அடிப்படையில் ஈரானுக்கு இந்திய அரசு சார்பில் மருத்துவ உதவிப் பொருட்கள் அனுப்பப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

