நாடு முழுவதும் உள்ள எண்ணெய் நிறுவனங்களிடம் உள்ள இருப்பு விவரங்களை அறிந்து கொள்வதற்காக, எரிசக்தி தரவுகளை தேசிய பாதுகாப்பு விஷயமாக வகைப்படுத்தி மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
இந்தியா தனது கச்சா எண்ணெய் தேவையில் 88 சதவீதத்தையும், இயற்கை எரிவாயு தேவையில் 50 சதவீதத்தையும், எல்பிஜி எரிவாயு தேவையில் 60 சதவீதத்தையும் இறக்குமதியை நம்பியே உள்ளது.
மேற்காசிய போர் தொடங்குவதற்கு முன்பு, இந்தியா இறக்குமதி செய்த கச்சா எண்ணெயில் 50 சதவீதத்திற்கும் மேற்பட்டவை, சவுதி அரேபியா, ஈராக், ஐக்கிய அரபு அமீரகம் போன்ற நாடுகளில் இருந்து ஹார்முஸ் ஜலசந்தி வழியாக கொண்டு வரப்பட்டவை. 95 சதவிகித எல்பிஜி வாயு, ஹார்முஸ் வழியாகவே கொண்டுவரப்பட்டது. போர் காரணமாக, ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடிவிட்டதால், இந்தியாவில் எரிவாயு விநியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டது.
ரஷ்யா, ஆப்பிரிக்கா, அமெரிக்கா போன்ற நாடுகளிடம் இருந்து கச்சா எண்ணெய்யை வாங்கி, எரிபொருள் தேவையை இந்தியா ஓரளவு சமாளித்து. இருந்தாலும், வளைகுடா நாடுகளில் இருந்து கச்சா எண்ணெய் வருவது பாதிக்கப்பட்டதால், இந்தியாவில் எரிவாயு சிலிண்டர்கள் விநியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டது.
இதையடுத்து, எரிவாயு விநியோகத்தில் உள்ள குளறுபடிகளை சரிசெய்வதற்கு மின்சாரம், உரம், வீட்டு உபயோக சிலிண்டர் விநியோகம் ஆகிவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு பற்றிய தகவல்களை ஒரு குடையின் கீழ் திரட்ட மத்திய அரசு முடிவு செய்தது. இதையடுத்து எரிசக்தி தரவுகளை தேசிய பாதுகாப்பு விஷயமாக மத்திய அரசு வகைப்படுத்தி அரசாணை வெளியிட்டுள்ளது.
அதன்படி, பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்கள், தனியார் எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள், எல்என்ஜி இறக்குமதி நிறுவனங்கள், குழாய் வழியாக எரிவாயு விநியோகம் செய்பவர்கள், நகரங்களில் எரிவாயு விநியோகம் செய்யும் நிறுவனங்கள், பெட்ரோ கெமிக்கல் நிறுவனங்கள் தங்களின் உற்பத்தி, இறக்குமதி, கையிருப்பு போன்ற விவரங்களை மத்திய பெட்ரோலிய அமைச்சகத்தின் கீழ் இயங்கும் திட்டமிடல் மற்றும் பகுப்பாய்வு பிரிவுக்கு மாதாந்திர, வாராந்திர அடிப்படையில் அனுப்பி வைக்க வேண்டும்.
மத்திய அரசின் இந்த முயற்சியானது, எரிபொருள் உற்பத்தி மற்றும் விநியோகத்தை கண்காணிக்கவும், இருப்பு விவரத்தை நிர்வகிக்கவும், சர்வதேச அளவில் பிரச்சனை ஏற்படும்போது, இந்தியாவில் எரிபொருள் விநியோகத்தில் ஏற்படும் பாதிப்புகளை குறைக்கவும் உதவும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

