2002 ஆம் ஆண்டு நடந்த குஜராத் கலவரத்தில் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
ரயில் எரிப்பு
கடந்த 2002-ம் ஆண்டு குஜராத் மாநிலம் கோத்ரா பகுதியில் வந்து கொண்டிருந்த சபர்மதி விரைவு ரயிலின் இரு பெட்டிகளுக்குத் தீ வைக்கப்பட்டது. இதில் ரயிலில் பயணித்த பலரும் எரித்துக் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்தால் குஜராத் முழுவதும் இஸ்லாமியர்களுக்கு எதிராக பயங்கர கலவரம் வெடித்தது. இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். அப்போது குஜராத் முதல்வராக நரேந்திர மோடி பதவி வகித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

காங்கிரஸ் எம்.பி உயிரிழப்பு
மேலும், இந்த சம்பவத்தின்போது, ஆமதாபாத்தின் குல்பர்க் சொசைட்டி வளாகத்தில் நடந்த கலவரத்தில், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த, எம்.பி. ஈஷான் ஜாப்ரி உட்பட 68 பேர் கொல்லப்பட்டனர். இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், மோடி உட்பட யாருக்கும் கலவரத்தில் தொடர்பில்லை எனக் கூறி வழக்கை முடித்தனர். இதனைத்தொடர்ந்து கலவரத்தில் உயிரிழந்த காங்கிரஸ் எம்.பி. எசான் ஜாப்ரியின் மனைவி ஜாகியா ஜாப்ரி இந்த வழக்கை குஜராத் போலீஸார் விசாரித்தால் நியாயம் கிடைக்காது எனக் கூறி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
சிறப்பு விசாரணை குழு
இதன்பெயரில் 2009ம் ஆண்டு குஜராத் கலவரம் குறித்து விசாரிக்க உயர் நீதிமன்றத்தின் நேரடி கண்காணிப்பின் கீழ் சிறப்பு விசாரணை குழு ஒன்று அமைக்கப்பட்டது. அதனையடுத்து சிறப்பு விசாரணை குழு தனது அறிக்கையை 2012ம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. இந்த வழக்கில் எந்த ஆதாரமும் இல்லை என்று உயர்நீதிமன்றம் 2017ஆம் ஆண்டு தள்ளுபடி செய்தது.

வழக்கு தள்ளுபடி
அதை எதிர்த்து ஜாகியா 2018ம் ஆண்டு உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் கடந்த ஆண்டு டிசம்பர் 9ம் தேதி குறிப்பிடாமல் இந்த வழக்கின் தீர்ப்பை ஒத்திவைத்தது. இந்நிலையில், இன்று இவ்வழக்கில் தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்றம், பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிரான இந்த வழக்கை தள்ளுபடி செய்து இன்று தீர்ப்பளித்துள்ளது.

