அரசியல்இந்தியாதொழில்நுட்பம்

ஆளுநரின் முரண்பாட்டால் பேரறிவாளன் விடுதலை வழக்கு ஒத்திவைப்பு

ஆளுநரின் முரண்பாட்டால் பேரறிவாளன் விடுதலை வழக்கு ஒத்திவைப்பு!

முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கில், 29 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைத்தண்டனை அனுபவித்துவரும் பேரறிவாளன், தனது தண்டனையை நிறுத்தி வைக்கக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு நீதிபதிகள் எல்.நாகேஸ்வர ராவ், பி.ஆர்.கவாய் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது பேரறிவாளன் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கோபால் சங்கரநாராயணன், ‘பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில் முதலில் ஆளுநர், பன்னோக்கு விசாரணைக் குழு அறிக்கை கிடைக்கவில்லை அதனால்தான் முடிவெடுக்க முடியவில்லை’ என்றார். ஆனால் ஆளுநர் முடிவு எடுப்பதற்கும், விசாரணை அறிக்கைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என சிபிஐ கூறியது.

அதன் பிறகும், பேரறிவாளன் விவகாரம் தொடர்பான அமைச்சரவை தீர்மானத்தின் மீது ஆளுநர் இன்னும் முடிவு எடுக்காமல் காலம் தாழ்த்தி வருகிறார். தற்போது இந்த விவகாரத்தில் குடியரசுத் தலைவர்தான் முடிவு எடுக்க முடியும் என மத்திய அரசின் உள்துறை அமைச்சகம் மூலம் ஆளுநர் உச்ச நீதிமன்றத்தில் பதில் அளித்துள்ளார்

இப்படி ஒவ்வொரு முறையும் முன்னுக்குப்பின் முரணாக ஆளுநர் பதில் அளித்து வருகிறார். இப்படியே சென்றால் கொலை வழக்குகளில் தண்டனை பெற்ற நபர்களை விடுவிக்க மத்திய அரசுக்குத்தான் அதிகாரம் உள்ளது என்ற நிலை ஏற்படும். இது மாநில அதிகாரத்தை கொச்சைப்படுத்தும் செயல். எனவே இந்த வழக்கில் இந்த நீதிமன்றமே முடிவு எடுக்க வேண்டும்’’ என்றார்.

இந்த வழக்கு சம்பந்தமாக இருதரப்பையும் விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள்,

‘‘விடுதலை செய்யும் அதிகாரம் யாரிடம் உள்ளது என்ற ஆளுநர் மற்றும் குடியரசு தலைவரின் குழப்பத்தில் பேரறிவாளன் ஏன் சிக்க வேண்டும்? அமைச்சரவை தீர்மானத்தின் அடிப்படையில் பேரறிவாளனை ஏன் விடுதலை செய்யக்கூடாது? 28 ஆண்டுகளாக சிறையில் உள்ளவரை விடுதலை செய்து இந்த வழக்கை ஏன் முடித்து வைக்கக்கூடாது?”என கேள்வி எழுப்பினர்.

பின்னர் இந்த விவகாரத்தில் முடிவு எடுக்க ஆளுநருக்கு அனைத்து அதிகாரமும் உள்ளது. அமைச்சரவை தீர்மானம் மீது முடிவு எடுக்காமல் காலம் தாழ்த்தக் கூடாது. அமைச்சரவை தீர்மானத்தை ஆளுநர் மாநில அரசுக்கே திருப்பி அனுப்பலாம். ஆனால் அதை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கக் கூடாது. அமைச்சரவையின் தீர்மானத்தை ஆளுநரை வைத்து மத்திய அரசு, மாநில அரசை முடக்கிக் கொண்டே இருந்தால் அது கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரானது.

இதுபோன்ற விவகாரத்தில் முடிவு எடுக்கக் கூடிய அதிகாரம் மாநில அரசுக்கு இருக்கிறது என்பது தொடர்பாக பல்வேறு வழக்குகளில் ஏற்கெனவே அரசியல் சாசன அமர்வு தெளிவுபடுத்தி விட்டது. எனவே இந்த விவகாரத்துக்குள் மீண்டும் ஆளுநரை கொண்டு வரவேண்டாம்.

மாநில அமைச்சரவையின் முடிவுக்கு ஆளுநர் கட்டுப்பட்டவர்தான். அமைச்சரவை முடிவு தொடர்பாக அவர் தனித்த கண்ணோட்டத்தோடும், தனிப்பட்ட கருத்துகளோடும் செயல்பட முடியாது. பேரறிவாளனை விடுவிப்பதே ஒரே தீர்வாக இருக்கும். ஆளுநரின் முரண்பட்ட முடிவால் இந்த வழக்கை தேவையில்லாமல் தள்ளிவைக்க நேரிடுகிறது’’ என அதிருப்தி தெரிவித்தனர். பின்னர் இந்த விவகாரத்தில் மத்திய அரசு பதில் அளிக்க விரும்பினால், தனது பதிலை எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்யலாம் என உத்தரவிட்டு, விசாரணையை மே 4-க்கு தள்ளிவைத்துள்ளனர்.

 

Related posts