கள்ளக்குறிச்சி சக்தி மேல்நிலைப் பள்ளியில் படித்து வரும் மாணவர்களை அரசு பள்ளிகளில் சேர்ப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
மாணவி தற்கொலை
கள்ளக்குறிச்சி மாவட்டம், கனியாமூரிலுள்ள சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வரும் மாணவி ஒருவர் கடந்த 13ம் தேதி பள்ளி விடுதியில் தற்கொலை செய்து கொண்டார். மாணவியின் மரணத்துக்கு நீதி வழங்க வேண்டி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் போராட்டங்கள் வலுத்தது. இந்த போராட்டம் கலவரமாக மாறி, போராட்டக்காரர்கள் தனியார் பள்ளியை சேதப்படுத்தி, பள்ளி வாகனங்களுக்கும் தீ வைத்தனர். இதன்தொடர்ச்சியாக தனியார் பள்ளிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும் இதனால் இன்று தனியார் பள்ளிகள் இயங்காது என்றும் தமிழ்நாடு தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு சார்பில் தெரிவிக்கப்பட்டது.
அமைச்சர் பேச்சு
இந்நிலையில், அமைச்சர் அன்பில் மகேஷ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், ‘இன்று கள்ளக்குறிச்சிக்கு நேரில் சென்று ஆய்வு செய்ய உள்ளேன். தவறு செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இந்த விவகாரத்தில் எதிர்கட்சிகள் அரசியல் செய்ய கூடாது. மேலும், தமிழகத்தில் அரசின் அனுமதி இல்லாமல் பள்ளிகள் விடுமுறை அறிவிக்க கூடாது’ என்று அன்பில் மகேஷ் கூறினார்.

