பள்ளி குழந்தைகளுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை அமல்படுத்த கோரி சத்துணவு ஊழியர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தர்ணா போராட்டம்
வேலூர், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் தர்ணா போராட்டம் நடைபெற்றது. போராட்டத்துக்கு மாவட்ட தலைவர்கள் சீனிவாசன், பியூலா எலிசபத் ராணி, சேகரன் ஆகியோர் தலைமை தாங்கினர். செயலாளர்கள் மலர், ராமமூர்த்தி, வித்தியபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக மாநில செயலாளர் ரவி கலந்து கொண்டு கோரிக்கைகள் குறித்து விளக்கினார். அப்போது போராட்டத்தில், தமிழக அரசு பள்ளி குழந்தைகளுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை சத்துணவு ஊழியர்கள் மூலமாகவே அமல்படுத்த வேண்டும். தனியார் வழங்கக்கூடாது என கோஷமிட்டனர். அனைவருக்கும் முறையான குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும். காலிபணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். தர்ணா போராட்டத்தில் ஏராளமான ஊழியர்கள் கலந்துகொண்டனர்.