அறிவியல்

நிலவில் நீர் உள்ளது உண்மையா ? வாருங்கள் தெரிந்துகொள்வோம்

 

பூமிக்கு வெளியே உயிரினம் வாழுகிறதா என்பதற்கான சோதனைகள் நடைபெற்றுவருகின்றன. இதில் மிகவும் முக்கியத்துவம் பெறுவது பூமியை சுற்றிவருவதும் அருகே உள்ளதுமான நிலா.

கடந்த காலங்களில் நீர் இல்லாத ஒன்றாகவே நிலா கருதப்பட்டது. பிறகு நடைபெற்ற சோதனைகளின் முடிவுகளில் இருள் பகுதிகளில் இருக்கும் பள்ளங்களில் தண்ணீர் இருப்பதை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

தற்போது சூரிய ஒளி படுகின்ற இடங்களிலும் நீர் இருப்பதாக நாசா கண்டறிந்துள்ளது. நிலவின் ஈர்ப்பு விசை என்பது மிகவும் குறைவு ஆகவே தான் அங்கே வளிமண்டலம் என்ற ஒன்று இல்லை.

அப்படி இருக்கையில் சூரிய ஒளியினால் நீர் மூலக்கூறுகள் நிலவை விட்டு வெளியே சென்றுவிடவே அதிக வாய்ப்புகள் உள்ளன.

இந்த சூழ்நிலையில் எது நீர் மூலக்கூறுகளை நிலவில் பிடித்து வைத்திருக்கிறது, எப்படி நீர் உருவாகி இருக்க முடியும் என்ற புதிய கேள்விகளுக்கு வித்திட்டுள்ளது இந்த கண்டுபிடிப்பு.

அதேபோல நாசா ஏற்கனவே திட்டமிட்டுற்கும் மனிதர்களை நிலவுக்கு அனுப்பும் ஆர்கிமிடீஸ் திட்டத்திற்கு தற்போதைய கண்டுபிடிப்பு பயனுள்ளதாக இருக்கும் எனவும் சொல்லப்படுகிறது.

மாற்றி அமைக்கப்பட்ட போயிங் விமானத்தில் அமைக்கப்பட்டிருக்கும் SOFIA [Stratospheric Observatory for Infrared Astronomy] எனும் அகச்சிவப்பு தொலைநோக்கியின் மூலமாக கண்டறியப்பட்ட தகவல் அடிப்படையில் சூரிய ஒளி படும் இடங்களிலும் நீர் மூலக்கூறுகள் கண்டறியப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இந்த திட்டமானது நாசா மற்றும் ஜெர்மனி விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் கூட்டுத் திட்டமாகும்.

இதில் போயிங் விமானமானது 45000 அடி உயரத்தில் பறந்து ஆராய்ச்சிகளை மேற்கொள்ளும். உலகிலேயே பறந்து ஆராய்ச்சி செய்திடும் மிகப்பெரிய ஆய்வு நிறுவனம் இதுவாகும்.

தற்போது நிலவில் நீர் மூலக்கூறுகள் ஏற்கனவே கண்டறியப்பட்ட பகுதிகளை விடவும் அதிகமான பகுதிகளிலும் இருக்கலாம் என கண்டறியப்பட்டுள்ளது.

 

நிலவில் மனிதர்களை குடியமர்த்திட வேலைகளைத்துவங்கும் போது நீர் மிகவும் அவசியமான ஒன்றாக இருக்கும். நேரடியாக நீர் மூலக்கூறுகள் நிலவின் பாறைகளில் தங்கியிருந்தால் அங்கே செல்கிறவர்கள் அதனை பிரித்து எடுத்து பயன்படுத்துவது எளிதான காரியமாக இருக்கும்.

சந்திரனின் மணலை சூடுபடுத்தியும் அதில் இருக்கும் நீரை பிரித்தெடுக்க முடியும். பூமியில் நீர் இருக்கிறது, உயிரினமும் இருக்கிறது.

ஆகவே உயிரினம் வாழ்வதற்கு நீர் மிகவும் அவசியமான ஒன்றாக பார்க்கக்கூடிய சூழலில் நாசாவின் புதிய கண்டுபிடிப்பு புதிய உத்வேகத்தை அளிக்கும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.

Related posts