தமிழக மின்சாரத்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தன் மீது வைத்த குற்றச்சாட்டுகளுக்கு மிக காட்டமாக பதிலளித்துள்ளார்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, கடந்த சில நாட்களுக்கு முன்னர் செய்தியாளர்களை சந்தித்த போது தமிழக மின்சாரத்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, தான் துறை சார்ந்த டெண்டர்களை, குறிப்பிட்ட டெண்டரில் பங்கேற்க தகுதியில்லாத நிறுவனங்களுக்கு முறைகேடாக கொடுத்துள்ளதாகவும், அது தொடர்பான ஆவணங்கள் தன்னிடம் இருப்பதாகவும் தெரிவித்திருந்தார். மேலும், ஊழலில் ஊற்றுக்கண்ணே செந்தில்பாலாஜி தான் என்றெல்லாம் விமர்சித்திருந்தார் அண்ணாமலை.
இந்நிலையில், மேற்கண்ட விவகாரம் குறித்து தனது சமூக வலைத்தள பக்கத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு காட்டமாக பதிலளித்துள்ளார் அமைச்சர் செந்தில் பாலாஜி. அதில், BGR நிறுவனம் டெண்டர் எடுத்த ஆண்டு 2019, டெண்டர் கொடுத்த ஆட்சி அதிமுக. வாழ்ந்த 13700+ சொச்ச நாட்களில் 20000 புத்தகம் வாசித்திருக்கும் அதிமேதாவி ஆர்வக்கோளாறுகளுக்கு புரிதல் வேண்டும் அல்லது புரிந்து கொள்ள பக்குவம் வேண்டும். அரைவேக்காடுகளுக்கு இரண்டும் இல்லை என அண்ணாமலையை கடுமையாக சாடியுள்ளார் செந்தில் பாலாஜி.
முன்னதாக, தன் மீதான குற்றச்சாட்டுகள் குறித்த ஆதாரங்களை 24 மணி நேரத்திற்குள்ளாக வெளியிடவில்லை என்றால் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மீது வழக்கு தொடரப்படும் என அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.