நாடு முழுவதும் அரசு நிகழ்ச்சிகள் மற்றும் பள்ளிகளில் தேசிய கீதம் பாடுவதற்கு முன்பு வந்தே மாதரம் பாடலின் 6 சரணங்கள் கட்டாயம் பாட அல்லது ஒலிக்கப்பட வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
”வந்தே மாதரம்” பாடல் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் ஜனவரி 28 ம் தேதியிட்ட புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. அந்த உத்தரவில், ”தேசிய பாடலான வந்தே மாதரம் இசைக்கப்படும் நேரம் 3 நிமிடங்கள் 10 விநாடிகள் ஆகும். ஜனாதிபதி வருகை, தேசியக்கொடி ஏற்றுதல், ஆளுநர்களின் உரை போன்ற அரசு நிகழ்ச்சிகளில் அதிகாரப்பூர்வ பாடல் பாடப்பட வேண்டும் அல்லது இசைக்கப்பட வேண்டும்.
தேசியப் பாடலும், தேசிய கீதமும் ஒன்றாக பாடப்படும் அல்லது இசைக்கப்படும் நேரத்தில் முதலில் தேசியப் பாடல் பாடப்பட வேண்டும் அல்லது இசைக்கப்பட வேண்டும். மேலும் தேசியப் பாடல் பாடப்படும் போது கூடியுள்ள அனைவரும் எழுந்து நின்று மரியாதை செலுத்த வேண்டும்.
தேசியக் கொடி ஏற்றும் போதும், பண்பாட்டு நிகழ்ச்சிகள், அணிவகுப்பு தவிர்ந்த விழாக்கள், ஜனாதிபதி அரசு அல்லது பொது நிகழ்ச்சிக்கு வருகை தரும் போதும் தேசியப் பாடலின் அதிகாரப்பூர்வ பதிப்பு குழு பாடலுடன் இசைக்கப்பட வேண்டும்.
அனைவரும் ஒரே சுரத்தில் பாட போதிய ஒலியமைப்பு ஏற்பாடுகள் இருக்க வேண்டும். தேவையான இடங்களில் பாடல் வரிகள் அச்சிட்டு பகிரலாம். அமைச்சர்கள் போன்ற முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்ளும் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சிகளிலும் தேசியப் பாடல் பாடலாம்.
அனைத்து நிகழ்ச்சிகளின் முழுமையான பட்டியலை வழங்க முடியாது என்பதால் நம்முடைய தாய்நாட்டுக்கு உரிய வணக்கம் மற்றும் மரியாதை செலுத்தும் வகையில் தேசியப் பாடல் ஒழுங்குடன் பாடப்பட வேண்டும். மேலும் தேசியப் பாடலை குழுவாக பாடுவதில் எந்தவித தடையும் இல்லை.
மேலும், அனைத்து பள்ளிகளிலும் தினசரி பணிகள் தேசியப் பாடலின் கூட்டு பாடலுடன் தொடங்க வேண்டும். மேலும், “பள்ளி நிர்வாகம் தேசியப் பாடல், தேசிய கீதம் மற்றும் தேசியக் கொடிக்கு மரியாதை செலுத்த வேண்டிய அவசியத்தை மாணவர்கள் மத்தியில் பரப்புவதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும்” என மத்திய உள்துறை அமைச்சகம் தனது உத்தரவில் தெரிவித்துள்ளது.

